சென்னை:அசத்தலான திரைக்கதை, அற்புதமான நடிப்பு, மாஸ்டர் மேகிங் என திரையரங்கில் மிரட்டலாக ஒடிக்கொண்டு இருக்கும் படம் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா. கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தை தொடர்ந்து இந்த வாரம் புதுவரவாக லாந்தர், பயமரியா பிரம்மை, ரயில், சட்டம் என் கையில் உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளன.
அது மட்டும் இன்றி நீண்ட நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, நடிகர் விஜய்யின் பிறந்த நாளை ஒட்டி துப்பாக்கி மற்றும் போக்கிரி படங்களும், நடிகர் கமல்ஹாசனின் குணா படமும் ரீ ரிலீஸ் ஆகின்றன. மஞ்சுமேல் பாய்ஸ் படத்திற்கு பிறகு குணா படம் எப்போது ரீ ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு இந்த வாரம் சினிமா ட்ரீட் தரமாக தயாராகி இருக்கிறது.
க்ரைம் த்ரில்லராக வெளியாகும் "லாந்தர்": யதார்த நாயகன் விதார்த் நடிப்பில் க்ரைம் த்ரில்லராக வெளியாகவுள்ள படம் 'லாந்தர்'. எம்.சினிமா புரொடக்சன்ஸ் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குநர் சாஜி சலீம் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்திருக்கிறார். விதார்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியான அஞ்சாமை திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நாளை லாந்தர் படமும் திரையரங்குகளில் வெளியாகிறது.
வட இந்திய தொழிலாளர்களின் வாழ்க்கையை பேச வரும் படம் "ரயில்": எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் வேடியப்பன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரயில். முதலில் வடக்கன் என தலைப்பு வைக்கப்பட்டு தற்போது ரயில் என பெயர் மாற்றப்பட்டு நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் தொழிலாளர்கள் பற்றிய மனிதம் பேசும் படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் குங்குமராஜ், வைரமாலா, ரமேஷ் வைத்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தனித்துவமான அனுபவம் தருமா? "பயமறியா பிரம்மை":புது இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பயமறியா பிரம்மை’.