சென்னை: XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில், சேவியர் பிரிட்டோ, சிநேகா தயாரிப்பில், இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடிகர் அதர்வா முரளியின் சகோதரர் ஆகாஷ் முரளி அறிமுகமாகிறார். ’நேசிப்பாயா’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா, நடிகர் ஆர்யா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய நடிகை நயன்தாரா, "நேசிப்பாயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஆகாஷ் முரளிக்கு வாழ்த்துகள். எனக்கு அதிதி ஷங்கரை மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் திறமையானவர். நான் பொதுவாக எந்த விழாவிற்கும் போக மாட்டேன். ஆனால், இது ரொம்பவே ஸ்பெஷல். கடந்த 15 வருடமாக இயக்குநர் விஷ்ணுவர்தன், அனு இருவரும் நல்ல பழக்கம். இருவரும் குடும்பம் போல எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.
அதனால், இந்த நிகழ்ச்சியின் அழைப்பிற்கு என்னால் மறுக்க முடியவில்லை. இவர்கள் ஆகாஷை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. ரொம்ப நாள் கழித்து ஒரு ஸ்வீட்டான காதல் கதையைப் பார்க்க இருக்கிறீர்கள்" என்று கூறிய நயன்தாரா, படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.
பின்னர் பேசிய நடிகர் ஆர்யா, "எனக்குப் பிடித்த இயக்குநரான விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் அறிமுகமாவதில் மகிழ்ச்சி. கொடுக்கும் காசில் விஷ்ணு ஸ்டைலிஷ்ஷாக படம் எடுப்பார். அனுவுடைய காஸ்ட்யூமும் சிறப்பாக இருக்கும். இது எங்களுக்கு ஒரு குடும்ப நிகழ்வு என்று சொல்லலாம். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று கூறி நேசிப்பாயா படத்தில் அதிதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அறிமுகப்படுத்தினார்.
நடிகை அதிதி பேசியது, "முதலில் என்னுடைய தயாரிப்பாளர்கள் சேவியர், சினேகாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் விஷ்ணுவர்தனுக்கு நன்றி. இது என்னுடைய முதல் காதல் கதை, எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். ஆகாஷூக்கு இது முதல் படம். சிறப்பாக நடித்துள்ளார். முரளி, அதர்வா மற்றும் எனக்கு கொடுத்த அன்பையும், ஆதரவையும் ஆகாஷூக்கும் கொடுங்கள். சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த நயன்தாரா மற்றும் ஆர்யா இருவரும் இந்த நிகழ்வை சிறப்பித்துக் கொடுத்ததற்கு நன்றி" என்று கூறினார்.
இயக்குநர் விஷ்ணுவர்தன் பேசும் போது, "விழாவிற்கு வந்துள்ள நயன்தாரா, ஆர்யா, தயாரிப்பாளர்கள் பிரிட்டோ, சிநேகா எல்லோருக்கும் நன்றி. இந்தப் படம் ஒரு லவ் டிராமா. கதையில் ஆக்ஷனும் உள்ளது. ஆகாஷூக்கு இது முதல் படம் போல இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார். அதிதி பயங்கர எனர்ஜியாக உள்ளார். படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.
இதையும் படிங்க:'சன்னி லியோனின் இமேஜ் இனி மாறும்' - நடிகை பிரியாமணி கூறுவது என்ன? - SUNNY LEONE New MOVIE