வேலூர் : ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி இணைந்து நடித்த அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், வேலூர் அடுத்துள்ள ராணுவப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு அமரன் திரைப்படம் இலவசமாக பழவஞ்சாத்து குப்பத்தில் அமைந்துள்ள பிரபல தனியார் திரையரங்கில் திரையிட திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கம்மவான் பேட்டை ஊராட்சிமன்றத் தலைவர் கவிதா முருகன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயலெட்சுமி ஏழுமலை ஆகியோருடன் இணைந்து கம்மவான் பேட்டை ராணுவ நலச்சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, இன்று( நவ 10) காலை ஷோ பார்ப்பதற்காக ராணுவப் பேட்டை கிராமத்தில் வசிக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்து அமரன் படத்தை கண்டு ரசித்தனர்.
முன்னதாக, ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க :'அமரன்' படத்தில் மெகா ஹிட்டான பாடல்கள்... சிவகார்த்திகேயன் செயலால் மகிழ்ந்த ஜிவி பிரகாஷ்!
அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த டி.வீரப்பள்ளி பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியின் தாளாளர் செல்வம் தன்னுடைய பள்ளியில் பயிலும் சுமார் 450-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளையும், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களையும் அழைத்துச் சென்று திருப்பத்தூர் - திருவண்ணாமலை சாலையில் இருக்கும் பிரபல திரையரங்கில் அமரன் திரைப்படத்தை பார்க்கச் செய்துள்ளார்.
இதுகுறித்து பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியரிடம் கேட்டபோது, "இந்த திரைப்படத்தை நான் முதலில் வந்து பார்த்தேன். அதற்குப் பிறகு நம்முடைய இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தையும் நம்மை பாதுகாக்க அவர்கள் படும் பாடுகளையும் உணர்ந்தேன்.
அந்த தேசப்பற்றை என்னுடைய பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் கொண்டு சேர்க்க விரும்பினேன். அவர்களுக்கு தேசப்பற்றை உணர்த்தும் விதமாக இந்த அமரன் திரைப்படம் உருவாகியுள்ளது. உண்மை நிலையை அப்படியே படமாக எடுத்திருக்கிறார்கள். வெளியே உலாவி வரும் சர்ச்சைகள் குறித்து கருத்துக்கள் படத்தில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இதை எடுத்த அந்த பட குழுவினருக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்