திருநெல்வேலி:வாழை திரைப்படத்தை நெல்லை ராம் திரையரங்கில் ரசிகர்கள் மற்றும் ஊர் மக்களுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் முதல் நாள், முதல் காட்சியைக் கண்டுகளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாரி செல்வராஜ், “வாழை திரைப்படத்திற்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வாழை திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரைகளை அதிகரிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
நல்ல நோக்கங்களும், நல்ல மனிதர்களின் கதைகளும், எளியோர்களின் வலியும் என்றும் தோற்காது. காலம் கடந்தாலும் என்றாவது ஒருநாள் வெற்றியைப் பெற்றே தீரும் என்பதற்கு வாழை திரைப்படம் ஒரு உதாரணம். நெருக்கமான மனிதர்களிடம் மட்டுமே நான் தனிமையை உணர்ந்த போது நான் சொல்லிய கதை இது, எனது வாழ்க்கை இதுதான். இங்கிருந்து தான் நான் புறப்பட்டு வந்தேன் என பலரிடம் சொல்லி இருந்தேன். நிலையான ஒரு இடத்தைப் பிடித்த பிறகு இந்த படத்தை எடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன்.
அது அனைத்தையும் பொதுமக்கள் தவிடிபொடியாக்கி, நினைத்ததை விட கூடுதல் வெற்றியை தந்துள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் நடைபெற்ற வன்கொடுமைச் சம்பவத்தை எடுத்துப் பார்க்க வேண்டும். ஏதோ சொல்வதற்கு சொல்ல வேண்டும் என்பதைப் போல் இயக்குநர்களை குறை சொல்லக்கூடாது.
வன்கொடுமைச் சம்பவங்கள் ஆண்டாண்டு காலமாக நடந்து தான் வருகிறது. உண்மையைத் தழுவி படம் எடுக்கும் போது கேள்வி கேட்க வேண்டும் என கேட்கப்படுகிறது. ஒரு திரைப்படத்தை வரைமுறைப்படுத்தி தான் எடுக்க வேண்டும் என்ற முறை கிடையாது. யாருக்கு எது போன்ற காட்சிகள் திரைப்படத்தில் வைக்கத் தோன்றுகிறதோ, அதேபோன்ற காட்சிகளை அவர்கள் வைத்து திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கதையில் உண்மை இருந்தால் அது மக்களைச் சென்றடையும். இயக்குநருக்கும், கதைக்கும் நேரடித் தொடர்பு உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து திரைப்படம் எடுத்து வருகிறேன்.