லவ்வர் (lover) திரைப்பட குழு செய்தியாளர் சந்திப்பு கோயம்புத்தூர்:தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து, எதார்த்தமாக நடிக்க கூடியவராக இருந்து வருகிறார் நடிகர் மணிகண்டன். இவர் நடித்து வெளியான ஜெய்பீம், குட் நைட் போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
அந்த வகையில், அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள படம் லவ்வர்(lover). ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இப்படம் பிப்ரவரி 9ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில், லவ்வர் திரைப்பட குழுவினர் பல ஊர்களுக்கு சென்று படத்தின் புரோமோஷனில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, படத்தின் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன், நடிகர் மணிகண்டன்,நடிகை கௌரி பிரியா, துணை நடிகர் கண்ணன் ரவி ஆகியோர் கோவையில் இன்று (பிப்.05) செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய நடிகர் மணிகண்டன், “கல்லூரி காலம் முடிந்த பிறகு இளைஞன் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்த கதை அம்சத்துடன், காதலை மையமாக கொண்டு இந்த படம் தயாராகி உள்ளது. திரைப்படம் என்ற ஒரு எண்ணம் மக்களுக்கு வராத அளவிற்கு மிக தத்ரூபமாக வாழ்க்கையை எடுத்து கூறும் விதத்தில் படம் உருவாகி உள்ளது.
இந்த படத்தின் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ள கௌரி மற்றும் தான் உட்பட அனைவரும் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்துள்ளனர். வருகிற ஒன்பதாம் தேதி படம் திரைக்கு வர உள்ளது. மேலும் ஜெய்பீம் படத்திற்கு எனக்கு தேசிய விருது கிடைக்காததை எண்ணி வருத்தப்படவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போதும் மிக விரும்பியே தான் நடிக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியதற்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகவும் கூறிய அவர், தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் கூறினார். தொடர்ந்து நடிகர் டெல்லி கணேஷ் குரலில் மிமிக்கிரி செய்த மணிகண்டன் லவ்வர் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். சமீபத்தில், லவ்வர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க:ரசிகர்கள் வெள்ளத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய்..! தனக்கே உரிய பாணியில் செல்பி!