சென்னை: லைகா புரொடக்சன்ஸ், சுபாஸ்கரன் தயாரித்து இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள படம் லால் சலாம். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.
லால் சலாம் படத்தின் படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால், தம்பி ராமையா, செந்தில், தங்கதுரை, திவாகர், நடிகை நிரோஷா, இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் நடிகர் விக்ராந்த் பேசுகையில், "என்ன சொல்வது என்று தெரியவில்லை. என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான ஒரு தருணத்தில் இருந்தேன். சினிமாவிற்கு வந்து 17 வருடம் ஆகிவிட்டது. எல்லாம் சரியாக இருந்தாலும் எங்கே மிஸ் ஆகிறது என்று தெரியவில்லை. சரி, சினிமா போதும் என்று முடிவில் தான் இருந்தேன்.
அப்போது தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போன் பண்ணி, லால் சலாம் படத்தை பற்றி சொன்னார். அப்போது தான் நினைத்தேன். இது கடவுள் கொடுத்த பரிசு. சினிமாவில் நான் இன்னும் இருக்க வேண்டும், இருப்பேன் என்று என்னை நம்ப வைத்தது. உங்களுக்கு நான் ரொம்ப கடமைப் பட்டுள்ளேன்" என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திடம் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த படத்தில் விஷ்ணு விஷால் போட்ட உழைப்பு ரொம்ப பெரியது. சினிமாவில் நிச்சயமாகப் பெரிய இடத்துக்கு வர வேண்டும். நிறைய நாள் நானும் விஷ்ணுவும் தோளில் சாய்ந்து அழுதிருக்கிறோம். இரண்டு பேரும் நிறையப் பிரச்சினை மற்றும் சந்தோஷங்களைப் பார்த்திருக்கிறோம்.
இந்த படத்தின் ஷீட்டிங்கில், இரண்டு, மூன்று முறை ரஜினிகாந்த் சார் என்னைப் பாராட்டினார். அவருடன் நடித்த 30 நாட்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாது. ரஜினி சாரிடம் நிறைய கேள்வி கேட்டிருக்கிறேன். ஏன் எப்போதும் யோசித்துக் கொண்டு இருக்கிறீங்க என்று கேட்டதற்கு, பாலச்சந்தர் சொல்லிக் கொடுத்ததை, சுட்டி காட்டி பேசுவார்.
இன்னும் அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக தன்னை நினைக்கவில்லை. இன்னும் பாலச்சந்தர் சார் ஸ்டூடன்ட்டாக தான் இருக்கிறார். இன்னும் கற்று கொண்டே இருக்கிறார். இந்த கதை எனக்கு அமைந்தது, நான் நடிக்க ரஜினிகாந்த் சார் ஒப்புக் கொண்டதற்கு நன்றி" என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து நடிகர் விஷ்ணு விஷால் பேசுகையில், "முக்கியமான படம் லால் சலாம். 1990 காலத்தில் நடக்கும் கதை. நிறைய உண்மையான விஷயங்களையும் கிரிக்கெட் மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். லால் சலாம் உலக சினிமா அளவுக்குச் சென்று சேரும் எனவும், நான் எந்த படம் நடித்தாலும் ரெட் ஜெயன்ட் தான் ரிலீஸ் பண்றாங்க. எனக்கு சினிமாவில் 15 வருடம் ஆகி விட்டது. அதில் முக்கியமாக இருந்தவர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின்.