சென்னை:தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்தநிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கிற்கு தனது குடும்பத்தினரோடு வந்த நடிகர் சிவகார்த்திகேயன், ரசிகர்களோடு சேர்ந்து அமரன் திரைப்படம் பார்த்தார்.
திரைப்படம் முடிந்த பிறகு திரையரங்குக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த சிவகார்த்திகேயன், சின்ன தளபதி என ரசிகைகள் கூச்சலிட பிளீஸ் வேண்டாம் என கையசைத்துக் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக முதலமைச்சர் எங்களுக்காக நேரம் ஒதுக்கி படம் பார்த்து வாழ்த்தியது மகிழ்ச்சி.
மேலும், தமிழகத்திலிருந்து இப்படி ஒரு வீரர் மகத்தான விஷயம் செய்ததை படமாக எடுத்து உள்ளீர்கள், அதை பார்க்க வேண்டும் என நினைத்ததாக முதலமைச்சர் தெரிவித்தார். நல்ல கதையை சிறப்பாக படமாக்கி உள்ளதாகவும், ஒவ்வொருவரின் உழைப்பும் திரையில் தெரிந்ததாகவும் எங்களை வாழ்த்தினார்.
இது வெறும் கதை அல்ல, இரண்டு பேரின் வாழ்க்கை. இந்தக் கதையை நாங்கள் சரியாக பதிவு செய்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். நிறைய இடங்களில் கைத்தட்டல்கள் வந்தது. நிறைய பேருக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்தப் படம் இருக்கும். ராணுவத்தில் இருப்பவர்கள், அவரின் குடும்பத்தினர் மட்டுமல்லாமல், பல்வேறு முன்களப் பணியாளர்களுக்கும் இந்தப் படம் சமர்ப்பணமாக இருக்கும்.