சென்னை: 'பியார் பிரேம காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில், நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஸ்டார்' (Star). இப்படத்தை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
முன்னதாக, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி வெகுவான பார்வையாளர்களைக் கவர்ந்தது. குறிப்பாக, நடிகர் கவின் இளம் பெண்ணாக தோன்றும் பாடல் காட்சி, ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இப்படம் மே 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், ஸ்டார் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. அப்போது நடிகர் கவின் பேசுகையில், “டாடா படத்திற்கு பிறகு இயக்குநர் இளன் இந்த கதை சொல்ல வந்தார். இந்தக் கதையில் தானாக எல்லாம் அமைந்தது போல் இருந்தது. இந்த படத்தின் மேல் இயக்குநர் வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
இந்த படத்துக்கு ரொம்ப பொறுமை தேவை என்பது தான் எனக்கு கதை கேட்டதும் தோன்றியது” என்றார். பின்னர், யுவன் சங்கர் ராஜாவைப் பற்றி பேசிய கவின், “சத்ரியன் படத்தில் நான் நடித்த பாடல் வரவில்லை. அது அப்போது கஷ்டமாக இருந்தது. இன்று எனது படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை இருக்கிறது என்பதில் ரொம்ப சந்தோசம்” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “எனக்கு நடனத்தில் அவ்வளவு சீக்கிரம் நம்பிக்கை வராது. ரிகர்சல் முடிந்த பிறகு தான் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. படத்தை தாண்டி இங்கு வேலை செய்த அனைவரும் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்று ஆசை. நல்ல கன்டென்ட் மற்றும் கதை இருந்தால் ரசிகர்கள் கைவிட்டதில்லை. சினிமாவை வைத்து சினிமாவில் எடுத்தால் ஓடாது என்று சொல்லுவாங்க. ஆனால், நிறைய படங்கள் ஓடியிருக்கிறது. ரசிகர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
பின்னர், நடிகர் சிவகார்த்திகேயன் இடத்தை நீங்கள் பிடிக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்தவர், “சிவா மற்றும் சேதுபதி இரண்டு பேரும் இன்ஸ்பிரேஷன். விஜய் சார், அஜித் சாரைப் பார்த்தது இல்லை. ஆனால், நம்மோடு இருந்த ஒருத்தர் கொடுக்கும் நம்பிக்கை தான் முக்கியம். இந்த படத்தின் டைட்டில் ஸ்டார் என்பது, மக்கள் யாரெல்லாம் ரசிக்கிறோமோ எல்லாரும் ஸ்டார் தான். அவன் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பதும் ஸ்டார் தான். வேறு சில காரணங்களால் இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க முடியவில்லை” என்றார்.