சென்னை:சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரிப்பில், இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் சிவராஜ்குமார் தமிழில் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'ஜாவா'.
மாநில எல்லைகளைக் கடந்து அனைத்து ரசிகர்களை கவரும் நடிகர்களுள் சிவராஜ்குமாரும் ஒருவர். பல ஆண்டுகளாக, தமிழ் ரசிகர்களிடமிருந்து மிகுந்த அன்பையும் வரவேற்பையும் பெற்று வருகிறார். மேலும், அவரது கன்னட திரைப்படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த 'ஜெயிலர்' படத்தில் ஒருசில காட்சிகள் மட்டுமே வந்திருந்தார்.
இருப்பினும், அவரது மாஸான நடிப்பு மற்றும் ஸ்டைலால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அதேபோல், தனுஷ் நடிப்பில் வெளியான 'கேப்டன் மில்லர்' படத்திலும் நடித்திருந்தார். இவரது நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான முஃப்தி (Mufti) படம் தான் தமிழில் சிலம்பரசன் நடிப்பில் 'பத்து தல' படமாக மறு உருவாக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
'ஜாவா' படத்தின் மூலம் தமிழில் நேரடியாக கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இப்படம் தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளிலும் உருவாக உள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்கும் இப்படத்தை செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.