சென்னை:நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்தாண்டு வெளியான அகிலன் மற்றும் இறைவன் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி முதல் முறையாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்திருக்கிறார். முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், நடிகர் ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு, இத்திரைப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது அதில் முதிர்ந்த தோற்றத்தில் சிறை கைதியாக ஜெயம் ரவி இருப்பதைப் போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது,படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இதனைத் தொடர்ந்து, 'சைரன்' படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அதில் ஜெயிலில் கைதியாக இருக்கும் ஜெயம் ரவி குரலில் கூறப்படும் ஒரு கதையும், அதற்கு இணையாகக் கீர்த்தி சுரேஷ் குரலில் மற்றொரு கதையும் என இரண்டு கதாபாத்திரங்களின் கூறும் கதைகள் படத்தின் மையக் கதையை விவரிப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான திருப்பங்களுடன், அதிரடி அக்ஷன் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ ஆகிய படங்களில் எழுத்து துறையில் பங்களித்தவர். இந்த சைரன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.