சென்னை: நடிகர் ஜெயம் ரவி 2003ஆம் ஆண்டு வெளியான ’ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரவி என்ற பெயருடன் படத்தின் பெயர் இணைக்கப்பட்டு 'ஜெயம் ரவி' என அழைக்கப்பட்டு வந்தார். கடந்த 22 வருடங்களில் 30 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் ’காதலிக்க நேரமில்லை’ பொங்கலன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தனது பெயரை ஜெயம் ரவி என்பதிலிருந்து ரவி மோகன் என மாற்றியுள்ளதாக நேற்று (ஜனவரி 13) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிற்கும் அறிக்கையில், " அசாத்திய நம்பிக்கை, அளவற்ற கனவுகளோடு புத்தாண்டில் நாம் கால் பதிக்கும் இந்த தருணத்தில், உங்களிடம் என் வாழ்க்கையின் புதிய பயணத்தை குறிக்கும் மாற்றத்தை பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
என் வாழ்க்கையில் சினிமா மீதான என் பற்று கடந்த காலத்திலும், தற்போதும் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே இருக்கிறது. இதுவே நான் இன்று இந்த நிலையில் இருக்கவும் அடித்தளமாக அமைந்துள்ளது. சினிமா பயணத்தை திரும்பி பார்க்கும் இந்த நேரத்தில் தாங்களும், சினிமாவும் எனக்கு வழங்கிய வாய்ப்புகள், அன்பு, ஆதரவு அனைத்திற்கும் கடமைப்பட்டுள்ளேன். எனக்கு வாழ்க்கை, அன்பு மற்றும் எல்லாவற்றையும் வழங்கிய துறைக்கு என் ஆதரவை எப்போதும் கொடுப்பேன்.
ரவி அல்லது ரவி மோகன்
இந்த நாள் தொடங்கி, நான் ரவி / ரவி மோகன் என்று அழைக்கப்பட விரும்புகிறேன். இந்த பெயர் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை கனவுகளை முன்னோக்கி எடுத்து செல்லும். என் கனவு மற்றும் மதிப்புகளுடன் புதிய பயணத்தை தொடங்கும். என்னை இந்த பெயரிலேயே அனைவரும் அழைக்குமாரும், ஜெயம் ரவி என்ற பெயரில் இனி வரும் காலங்களில் அழைக்க வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.