சென்னை: பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்தியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி, கடந்த 2017ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்டது. இதனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், பல்வேறு துறையைச் சார்ந்த பிரபலங்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் இருக்கும் இந்த நிகழ்ச்சி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த ஏழு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வந்தார். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பிக் பாஸ் 8வது சீசனில் இருந்து விலகுவதாக நேற்று அவர் அறிவித்திருந்தார்.
நடிகர் கமல்ஹாசன் தக் லைஃப், கல்கி 2ஆம் பாகம், இந்தியன் 3 உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருவதால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக கூறப்பட்ட நிலையில், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகியது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் (Disnep Plus Hotstar) 24 மணி நேரமும் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் தற்காலிகமாக விலகியபோது நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார்.