டெல்லி: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் Bassist (பேசிஸ்ட் - பாஸ் கிதார்களை இசைக்கும் இசைக்கலைஞர்) ஆக பணிபுரியும், மோகினி டே (28) தனது கணவர் மார்ஷ் ஹார்ட்சச்சும்-ஐ (30) பிரிவதாக சமூக வலைத்தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக சினிமா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது துணைகளிடம் இருந்து பிரிவது தொடர்பான செய்திகள் அதிகளவில் நாம் பார்க்க முடிகிறது. அந்த வகையில், பல ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பின்னர் ரஹ்மானிடமிருந்து பிரியும் இந்த கடினமான முடிவை எடுத்திருப்பதாக சாய்ரா பானு அறிக்கை வெளியிட்டார். இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானும் இதனை உறுதி செய்யும் விதமாக மறுதினம் தனது எக்ஸ் பக்கததில், மனைவி சாய்ரா பானுவை 29 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பின்னர், பரஸ்பரமாக பிரிவதாக ஒரு உருக்கமான பதிவை பதிவிட்டிருந்தார்.
மோகினி டே (mohini dey Instagram) இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் பாசிஸ்ட் மற்றும் பின்னணி பாடகியாக பணிபுரியும் மோகினி டே தனது கணவர் இசையமைப்பாளர் மார்ஷ் ஹார்ட்சச் இருவரும் பிரிந்து விட்டதாகத் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து அறிவித்து சில மணி நேரங்களிலேயே இந்த அறிவிப்பு வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:30-ஐ தொட நினைத்தேன்; சூழல் இடம்கொடுக்கவில்லை - ஏ.ஆர்.ரஹ்மான்
இதுகுறித்து மோகினி டே மற்றும் மார்ஷ் ஹார்ட்சச் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எனது அன்பான நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் என்னை இணையத்தில் பின்தொடர்பவர்களுக்கு, நானும் என் கணவரும் பிரிந்துவிட்டோம் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். நானும் எனது கணவரும் பரஸ்பரமாக பிரிகின்றோம் என்பதை முதலில் எனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்."
"நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்களாகவே இருப்போம். எங்களது வாழ்க்கையில் இருவரும் வெவ்வேறு விஷயங்களை விரும்புகின்றோம். அதனால், விவாகரத்து மூலம் பிரிந்து செல்வதே சிறந்த வழி என்பதை இருவரும் சேர்ந்து முடிவு செய்துள்ளோம். ஆனால், MaMoGi மற்றும் Mohini Dey குழுவில் இருவரும் சேர்ந்தே வேலை செய்வோம். நாங்கள் இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொள்கிறோம். அது மட்டும் எந்த நேரத்திலும் நிற்காது."
"உலகில் உள்ள அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். தற்போது வரை எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நேரத்தில் எங்களிடம் பாசிட்டிவாகவும், எங்களது தனிப்பட்ட விருப்பத்திற்கு மதிப்பளிக்கவும் வேண்டுகிறோம். தவறான கணிப்புகளைத் தவிப்பது நல்லது," எனப் பதிவிட்டுள்ளனர்.
மோகினி டே ஏ.ஆர்.ரஹ்மானுடன் உலகளவில் நடைபெற்ற 40க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். கடந்த 2023 ஆக்ஸ்ட் மாதத்தில் தான் தனது முதல் ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். ஏ.ஆர் ரஹ்மான் மட்டுமின்றி, ஜாகிர் ஹுசைன், ரஞ்சித் பரோட், ஸ்டீவ் வை போன்ற புகழ்பெற்ற இசைக் கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். சிறு வயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்ட மோகினி டே, தனது தந்தை வழிகாட்டுதலில் விடாமுயற்சியுடன் செயல்பட்டு தற்போது சர்வதேச அளவில் திறமையான ஒரு இந்திய பாஸ் ப்ளேயர்களில் ஒருவராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்