தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"அது முடிந்த கதை.." - இளையராஜா குறித்த கேள்விக்கு வைரமுத்து ‘நச்’ பதில்! - Ilayaraja Vs Vairamuthu - ILAYARAJA VS VAIRAMUTHU

Ilayaraja Vs Vairamuthu: "எந்த ஒரு மேடையிலும் சர்ச்சையான கருத்தை உண்டாக்க நான் விரும்புவதில்லை. சர்ச்சைகள் உண்டாக்கப்படுகின்றன, அதில் இருந்து நான் வெளியேற விரும்புகிறேன்" என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இளையராஜா மற்றும் வைரமுத்து
இளையராஜா மற்றும் வைரமுத்து (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 4:00 PM IST

சென்னை:சென்னை பிரசாத் அரங்கில், ஆதி ஆறுமுகம் இயக்கத்தில் வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'பனை' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று. இதில் கவிஞர் வைரமுத்து, வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

இப்படத்தில் பாடல் வரிகள் எழுதியுள்ள வைரமுத்து இசைத் தட்டை வெளியிட, அதனை வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைரமுத்துவிடம், கங்கை அமரன் வெளியிட்ட காணொளி தொடர்பான கேள்விக்கு, "முடிந்த கதை தொடர வேண்டாம் என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள்" என்றார்.

உங்களுக்கு வருத்தம் உள்ளதா என்ற கேள்விக்கு, "இது குறித்து பேசுவது பண்பாட்டு ரீதியாக உயர்ந்தது இல்லை என்பது என் கருத்து. எங்கள் இருவருக்கமான பிரச்னைக்கு பிறகும் 30 ஆண்டுகளாக சிறந்த பாடல்களை நான் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இளையராஜாவின் சிம்பொனி குறித்தான கேள்வி கேட்கப்பட்ட போது, "இந்த செய்தியை நீங்கள் தவிர்க்க விரும்ப மாட்டேன் என்பது எனக்கு தெரியும். நான் எந்த ஒரு மேடையிலும் சர்ச்சையான கருத்தை உண்டாக்க விரும்புவதில்லை. நான் சர்ச்சைக்குப் பிறந்தவன் இல்லை.

சர்ச்சைகள் உண்டாக்கப்படுகின்றன. அவ்வாறு உண்டாக்கப்படுகிற சர்ச்சைகளில் இருந்து நான் வெளியேற விரும்புகிறேன். ஆனால், காலம் சர்ச்சைகளை முடிக்க விரும்புவதில்லை என்று தெரிகிறது. சமூகம் சர்ச்சைகளை உருவாக்கிக் கொண்டு அதில் குளிர்காய நினைக்கிறது.

ஆனால், தனி மனிதர்கள் சர்ச்சைகளை விட்டு தள்ளி நிற்கவே ஆசைப்படுகிறார்கள். நான் தமிழோடு இருக்க நினைக்கிறேன், ஆனால், சர்ச்சைகளோடு விலக நினைக்கிறேன்" என்றார். தொடர்ந்து, பாடல்களில் ஆங்கிலச்சொல் பயன்படுத்துவது தொடர்பான கேள்விக்கு, "google என்பது பெயர்ச்சொல், அதை நீங்கள் தவிர்க்க முடியாது. சேக்ஸ்பியர் என்பதை சிகப்பிரியர் என்பதில் இன்று மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை" என்று தெரிவித்தார்.

முன்னதாக நிகழ்ச்சி மேடையில் வைரமுத்து பேசுகையில், "இப்போது வருகிற தமிழ்த் திரைப்படங்களின் பெயர்களை பார்த்தால் தான் கொஞ்சம் துக்கப்படுகிறேன். சில நேரங்களில் வெட்கப்படுகிறேன். அந்தப் பெயர் எனக்கு ஒன்றையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை, அது வெறும் ஒரு சொல்லாக இருக்கிறது.

ஒரு தலைப்பு என்பது ஒரு படத்திற்கு ஒரு கருத்தைச் சொல்வதாகவும், இன்னொன்று ஒரு காட்சியை விரியச் செய்வதாகவும், அது குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாகவும் அமைய வேண்டும் என்று தான் நம்முடைய முன்னோர்கள் எல்லாம் தலைப்பு வைத்தார்கள்" என தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க:41 வயதில் நோயில் சிக்கிய ஃபகத் ஃபாசில்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details