சென்னை:கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'. ரெட் ஜெயன்ட் மூவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். காதலிக்க நேரமில்லை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக ஊடகங்களில் பரவலாக வரவேற்பைப் பெற்று வருகிறது.
இன்றைய இளைய தலைமுறையினரின் காதலை பெண்ணின் பார்வையிலிருந்து சொல்லும் படமாக இருக்கும் என டிரெய்லரிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. தணிக்கையில் ’காதலிக்க நேரமில்லை’ படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் முழு நீள நேரம் 2 மணி நேரம் 22 நிமிடங்கள் என தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே இரு பாடல்கள் தனித்தனியே வெளியாகியிருந்த நிலையில், ’காதலிக்க நேரமில்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 7ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத்தும் விழாவில் கலந்துகொண்டார்.
நிகழ்வில் ஏ.ஆர்.ரகுமானைப் பற்றி அனிருத் பேசுகையில், “இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் என்னை ஏ.ஆர்.ரகுமானோடு ஒப்பிட்டு அடுத்த இவர் தான் என நிறைய கருத்துக்கள் நிலவுகிறது. நான் முன்னாடியே சொன்னதுதான் தலைவன் தலைவன் தான் தொண்டன் தொண்டன் தான். லவ் யூ சார்” என தனது அன்பை வெளிப்படுத்தினார்.
பின்பு பேசிய ஏ.ஆர்.ரகுமான், “அப்போது மொத்தம் 10 இசையமைப்பாளர்கள் இருப்பார்கள், தற்போது 10 ஆயிரம் இசையமைப்பாளர்கள் உள்ளனர். அதற்கு இடையில் நிலைத்து நிற்கிறார். திறமை இல்லாமல் அது முடியாது. அதையெல்லாம் செய்துவிட்டு இங்கே வந்து மிக பணிவாக தலைவன் தலைவன் தான், தொண்டன் தொண்டன் தான் என்று கூறுகிறார். அதற்கு தனி மனது வேண்டும்”. என பேசினார்.
இதையும் படிங்க:மதகஜராஜா போல பல ஆண்டுகள் வெளியாகாமல் உள்ள படங்கள் என்னென்ன தெரியுமா?
நிகழ்ச்சிக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அனிருத், “இந்த நிகழ்ச்சிக்கு இசையமைப்பாளராகவோ, விருந்தினராகவோ வரவில்லை. உற்சாகப்படுத்த வந்திருக்கிறேன்” என்றார். அவரிடம் விடாமுயற்சி மற்றும் ’தளபதி 6’9 படங்கள் குறித்து அப்டேட் கேட்கப்பட்டது. அதற்கு, அந்தந்தந்த படங்களின் தயாரிப்பாளர்கள் கொடுப்பார்கள் என பதிலளித்தார். மேலும் ’லியோ’ திரைப்படத்தின் ஒரிஜினல் பின்னணி இசை (OST) குறித்த அப்டேட் விரைவில் வரும் என பதிலளித்தார். கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படமான ’வணக்கம் சென்னை’ படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.