தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விஜய் லியோ படத்திற்கு தடை கோரிய வழக்கு.. ஐகோர்ட் மதுரை அமர்வு அதிரடி தீர்ப்பு! - VIJAY LEO FILM CASE

விஜய் நடித்த லியோ படத்திற்கு தடை விதிக்க உத்தரவிட கோரிய வழக்கில், மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

லியோ பட போஸ்டர், ஐகோர்ட் மதுரை அமர்வு
லியோ பட போஸ்டர், ஐகோர்ட் மதுரை அமர்வு (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2025, 3:51 PM IST

மதுரை: நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகளவில் இருப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரைச் சேர்ந்த ராஜமுருகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்த இப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் உள்ளதோடு, துப்பாக்கி, கத்தி, இரும்பு கம்பிகளும், வீட்டிலேயே துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை தயாரிப்பது பற்றிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

மேலும், பல்வேறு மத சின்னங்களை பயன்படுத்தி மதம் தொடர்பான முரண்பாடான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, படத்தில் எதிரிகளை பழிவாங்க பெண்கள், குழந்தைகளை கொல்ல வேண்டும், போதைப்பொருள் பயன்படுத்துதல், மனிதர்களை துன்புறுத்துதல் உள்ளிட்ட வன்முறை மற்றும் பார்க்கத்தகாத காட்சிகளை படமாக உருவாக்கியுள்ளார்.

மேலும், கலவரம், சட்ட விரோத செயல்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் செய்தல், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், மக்களைக் கொல்வதை தற்காப்புச் செயலாகக் கூறுவது, பொது அதிகாரத்தை அச்சுறுத்துவது, போலீஸ் பாதுகாப்புக்காக நீதித்துறை அதிகாரிகளிடம் பொய் சொல்வது, கார், இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, காவல்துறை உதவியுடன் அனைத்து குற்றங்களையும் செய்ய முடியும் போன்ற காட்சிகள் மூலம் சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதல்களை காண்பிக்கிறார்.

இதையும் படிங்க:எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'ஏழு கடல் ஏழு மலை' டிரெய்லர்... இணையத்தில் வைரல்!

இதன்மூலம் இளம் சிறார்கள் தவறான பாதைக்கு செல்ல வாய்ப்புள்ளது. இதுபோன்ற படங்களை தணிக்கை துறையினர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும்.

எனவே, லியோ திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் லியோ திரைப்படக்குழு மீது வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகளை எடுத்து திரைப்படமாக்கியதற்கு, இந்திய குற்றவியல் தண்டனை சட்டங்களின் படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் .மேலும் லியோ படத்தை முற்றிலும் தடை விதிக்க வேண்டும்” இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லியோ பட் குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல, விளம்பர நோக்கோடு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார். இதனையடுத்து, நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details