டெல்லி : உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் அண்மையில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். அப்போது அங்கு உள்ள ஊடகத்திற்கு நடிகர் ரன்வீர் சிங் பேட்டி அளித்தார். அந்த வீடியோவை, சிலர் குறிப்பிட்ட கட்சிக்கு ரன்வீர் சிங் ஆதரவாக பேசி வாக்கு சேகரிப்பது போல் டீப் பேக் செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலான நிலையில், அந்த வீடியோவில் பேசிய கருத்துகள் தன்னுடையது அல்ல செயற்கை நுண்ணறிவ்கு ஏஐ தொழில்நுட்பம் மூலம் வீடியோவில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு போலியாக பரப்பட்டு வருவதாக நடிகர் ரன்வீர் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக, ரன்வீர் சிங்கின் செய்தி தொடர்பாளர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து உள்ளார். ஏஐ சார்ந்த டீப் பேக் மூலம் வீடியோ வெளியான விவகாரத்தில் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து உள்ளதாகவும் எப்ஐஆர் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருவதாகவும் ரன்வீர் சிங்கின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
அதன்படி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக இதேபோல் மற்றொரு பாலிவுட் நடிகர் அமீர் கான் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக பேசியதாக டீப் பேக் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாகவும் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க :மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு முதல் வெற்றி! சூரத் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு! எப்படி நடந்தது? - Lok Sabha Election 2024