தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மாயி பட இயக்குநரின் உடல் நல்லடக்கம்..! - Director Surya Prakash - DIRECTOR SURYA PRAKASH

Director Surya Prakash: மாயி, திவான், மாணிக்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சூர்ய பிரகாஷ் உடல் நலக்குறைவால் காலமான நிலையில், அவரது சொந்த ஊரான நிலக்கோட்டையை அடுத்த எஸ்.வாடிப்பட்டி கிராமத்தில் சூர்ய பிரகாஷின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இயக்குநர் சூர்ய பிரகாஷ் உடல்
அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இயக்குநர் சூர்ய பிரகாஷ் உடல் (Credit - ETVBharat TamilNadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 6:22 PM IST

திண்டுக்கல்:நடிகர் சரத்குமாரை வைத்து மாயி என்ற பிரபல திரைப்படத்தை இயக்கிய பாண்டியன் என்கின்ற சூர்ய பிரகாஷ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

இவரது மரணம் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பலர் அவர்களது சமூக வலைதளப்பக்கத்தில் இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில், இவரது உடல் அவரது சொந்த ஊரான நிலக்கோட்டையை அடுத்த எஸ்.வாடிப்பட்டி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

யார் இந்த சூர்ய பிரகாஷ்?:நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டி அருகே, எஸ்.வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி முத்து அம்பலத்தேவர். இவரது மகனான பாண்டியன் என்கின்ற சூர்ய பிரகாஷிற்கு வசந்தமலர் (50) என்ற மனைவியும் சோனா (25) என்ற மகளும் உள்ளனர்.

இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு பல்வேறு திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய பின்னர் 2000-ஆண்டில் நடிகர் சரத்குமாரை வைத்து மாயி என்ற பிரபல திரைப்படத்தை இயக்கினார்.

தொடர்ந்து 2003ம் ஆண்டு மீண்டும் சரத்குமாரை வைத்து திவான் என்ற திரைப்படத்தையும், அதனைத் தொடர்ந்து ராஜ்கிரண் நடித்த மாணிக்கம், ஜீவன் நடித்த அதிபர், வருசநாடு,தெலுங்கில் ராஜசேகரை வைத்து பரசின்ன ரெட்டி என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.

விரைவில், நடிகர் சரத்குமாரை வைத்து புதிய படத்தை இயக்க உள்ள நிலையில், நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை இரவு) இயக்குனர் சூரிய பிரகாஷிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உடல் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த எஸ்.வாடிப்பட்டி கிராமத்திற்கு கொண்டுவந்து பொதுமக்கள் அஞ்சலிகாக வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும், இயக்குனர் சூரியபிரகாஷ் நடிகர் சரத்குமாரின் நெங்கிய நண்பர் என்பதால், இவரது மரணத்திற்கு சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில் இரங்கலை தெரிவித்திருந்தார். மேலும், அவரது உடலை சொந்த கிராமம் கொண்டு செல்ல அனைத்து உதவிகளும் செய்துள்ளார்.

இதையும் படிங்க: "ஆதி அண்ணாவை பாக்கனும்..".. தேம்பி தேம்பி அழுத ரசிகை.. வைரலாகும் வீடியோ! - Hip Hop Aadhi Fan Girl Crying

ABOUT THE AUTHOR

...view details