ஹைதராபாத்: ’புஷ்பா 2’ படத்தின் டிரெய்லருக்கும், அனிமல் படத்திற்கும் உள்ள ஒற்றுமை குறித்தும் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ’புஷ்பா 2’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் கடந்த 17ஆம் தேதி வெளியானது. மாபெரும் பட்ஜெட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள புஷ்பா 2 படத்தின் டிரெய்லர் வரவேற்பை பெற்று வருகிறது.
புஷ்பா முதல் பாகம் பான் இந்தியா படமாக 1000 கோடி வசூல் செய்த நிலையில், இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. இதில் முதல் பாகம் போல ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ளார். மேலும் இந்த பாகத்திலும் ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். புஷ்பா முதல் பாகத்தில் ராஷ்மிகா நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த பாகத்தில் ராஷ்மிகா அல்லு அர்ஜூன் மனைவியாக நடித்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் புஷ்பா 2 படத்திற்கும் ரன்பீர் கபூர் நடித்த ’அனிமல்’ (Animal) படத்திற்கும் உள்ள ஒற்றுமை குறித்தும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் பதிவிட்டு வருகின்றனர். அதாவது அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் மனமுடைந்து சோகமாக இருக்கும் நேரத்தில் ராஷ்மிகா மடியில் ஆறுதலாக தலையை வைத்திருப்பது போன்ற காட்சியிருக்கும். அதேபோல் புஷ்பா 2 படத்தில் தனது மனைவியான ராஷ்மிகா காலை அல்லு அர்ஜூன் தனது முகத்தில் வைத்து ஸ்டைலாக இருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும்.