தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'லாபதா லேடீஸ்' படத்தில் அப்படி என்ன இருக்கு?.. ஆஸ்கர் தேர்வுக்கு இயக்குநர் வசந்த பாலன் எதிர்ப்பு! - vasantha balan about oscars 2025

director vasantha balan about laapataa ladies: 2025ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் இந்தியா சார்பில் 'லாபதா லேடீஸ்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு இயக்குநர் வசந்த பாலன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வசந்த பாலன்
இயக்குநர் வசந்த பாலன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 26, 2024, 6:36 PM IST

சென்னை: 2025ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் 'லாபதா லேடீஸ்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழில் மகாராஜா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கொட்டுக்காளி, தங்கலான், வாழை, ஜமா, மலையாளத்தில் ஆடுஜீவிதம், உள்ளொழுக்கு உள்ளிட்ட படங்கள் ஆஸ்கர் போட்டிக்கு விண்ணப்பித்திருந்தன. ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா மூலம் 13 பேர் கொண்ட குழு 'லாபதா லேடீஸ்' படத்தை தேர்வு செய்து அனுப்பியுள்ளது.

இந்நிலையில் இதற்கு இயக்குநர் வசந்தபாலன் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். லாபதா லேடீஸ் திரைப்படம் பொழுதுபோக்கு தன்மைக்காகவும், சுவாரஸ்யத்திற்காகவும் உருவாக்கப்பட்ட ஃபீல் குட் டிராமா என்றும், கொட்டுக்காளி, வாழை, ஆடுஜீவிதம் உள்ளிட்ட படங்களை ஆஸ்கருக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து பதிவிட்டு இருந்தார்.

இதுகுறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய இயக்குநர் வசந்த பாலன், "'லாபதா லேடீஸ்' ஒரு ஆள்மாறாட்டக் கதை. திருமணமான இரண்டு தம்பதிகள் ரயிலில் செல்கிறார்கள். ரயிலை விட்டு இறங்கும் போது தனது மனைவியை அழைத்துச் செல்வதற்கு பதிலாக வேறு ஒருவர் மனைவியை அழைத்துச் செல்கிறார். இதனால் இவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவை கலந்து கூறப்பட்ட சராசரியான ஃபீல் குட் டிராமா (feel good drama).

இயக்குநர் வசந்தபாலன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஆஸ்கர் வெளிநாட்டுப் பிரிவில் அனுப்பப்படும் படங்களுக்கு குறைந்தபட்ச தரம், திரைமொழி உள்ளது. வாழ்வியலை சொல்லும் சர்வதேச தரத்திலான படங்கள் தான் இருக்க வேண்டும். கொட்டுக்காளி, தங்கலான், ஆடுஜீவிதம் உள்ளிட்ட படங்கள் நம்மை வேறு உலகிற்கு எடுத்துச் செல்லும் படங்களாக இருக்கின்றன. வசனங்களை விட திரை மொழியை முக்கியமாக நம்பும் படங்களாக இருக்கின்றன. ஏன் இதுபோன்ற படங்களை ஆஸ்கருக்கு அனுப்பாமல் ஆள்மாறாட்ட படத்தை அனுப்புகிறார்கள் என்ற வருத்தம் தான் எனக்கு ஏற்பட்டுள்ளது. லாபதா லேடீஸ் பீல் குட் டிராமாதான்.

நான் பல வருடங்களாக ஆஸ்கருக்கு படங்கள் எப்படி தேர்வு செய்கிறார்கள் என்று பார்த்துள்ளேன். அவர்களின் தேர்வு முறை, தன்மையுடன் இப்படம் பொருந்திப் போகவில்லை என்பதே என் கருத்து. தேர்வுக் கமிட்டியில் தேசிய விருது பெற்ற வெற்றிமாறன் போன்ற இயக்குநர்கள் இருந்திருக்க வேண்டாமா என்பது தான் எனது கேள்வி. இப்படங்களை தேசிய விருது பெற்ற இயக்குநர்கள் குழு தேர்வு செய்ததா என்றும் தெரியவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் இன்னும் சரியான படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருக்கும்.

இதையும் படிங்க: தேவரா, மெய்யழகன், டிமான்டி காலனி 2... இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடிகளில் வரிசை கட்டும் திரைப்படங்கள்! - theatrical and OTT releases

லாபதா லேடீஸ் படம் குறித்து எனக்கு வருத்தம் இருந்தது அதனை தெரிவித்தேன். தற்போது தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் வந்து கொண்டு இருக்கிறது. மலையாளத்திலும் நல்ல படங்கள் வருகிறது. தமிழ் சினிமாவை கரோனாவுக்கு முன், பின் என பிரிக்கலாம். ஓடிடி வரவால் நல்ல படங்களை திரையரங்குகளில் பார்ப்பதில் இருந்து ரசிகர்கள் நழுவிக்கொண்டு வருகின்றனர். வாழையின் வெற்றி எனக்கு சர்ப்ரைஸாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details