சென்னை: சங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்தியன் 2 படம் அடுத்த மாதம் 12ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படத்தின் நீளம் கருதி, இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரண்டு பாகங்களாகவும் படம் தயாராகி உள்ளது.
இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பளார் சுபாஸ்கரன் (Video Credits - ETV Bharat Tamil Nadu) இப்படத்தில் கமலுடன் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் லைக்கா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று (ஜுன் 1) மாலை, சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய இயக்குநர் சங்கர், “சில பாடல்களில் பாடல் வரிகள் நன்றாக இருக்கும். ஆனால் பா. விஜய் எழுதிய, 'பாரா' பாடலில் எல்லா வரிகளும் நன்றாக இருந்தது. இந்தியன் படம் ரிலீஸ் ஆனதும் இந்தியன் 2 பண்ணலாம் என்று கமல் சொன்னார். அப்போது என்னிடம் கதை இல்லை என்று கூறினேன்.
7, 8 வருடங்கள் கழித்து பேப்பர் படிக்கும்போது லஞ்சம் கொடுக்கல், வாங்கல் அதிகமாக இருக்கும்போது, இப்போது இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும்? என்று யோசித்தேன். பிறகு கமல்ஹாசனிடம் பேசி இந்தியன் 2 ஓகே பண்ணிட்டோம். 28 வருடங்கள் கழித்து கமல்ஹாசன், இந்தியன் தாத்தா மேக்அப் போட்டு வரும்போது அதே சிலிர்ப்பு. ஷூட்டிங்கில் இந்தியன் தாத்தா இருப்பதாகவே ஒரு ஃபீலிங்.
இந்தியன் தாத்தா நல்லவர்களுக்கு ஹீரோ. கெட்டவங்களுக்கு கொடூரமான வில்லன். 360 டிகிரி நடிகர் கமல்ஹாசன் தான். ஆனால் இந்த படத்தில் 361 டிகிரியாக ஒன்றை பண்ணுகிறார். இன்றைக்கும் எல்லாருக்கும் பிடிக்கும் வகையில், காலத்திற்கேற்ப நடிக்கிறார். தன்னை அப்டேட் செய்து கொள்கிறார். 70 நாள் இந்தியன் தாத்தா மேக் அப் போட்டிருக்கிறார். கமல்ஹாசன் போல் நடிகர் உலகத்தில் யாரும் கிடையாது.
கமல்ஹாசனை வைத்து இந்தியன் & இந்தியன் 2 பண்ணியது பெருமை. இந்த படத்தில் சிறந்த துணை நடிகருக்கான விருது சித்தார்த்துக்கு கிடைக்கலாம். இந்த படம் வந்த பிறகு நடிகர் விவேக் எப்போதும் நம்மோடு இருப்பார். அவருக்கும் இந்தியன் தாத்தாவுக்குமான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. மனோ பாலாவும் இந்த படத்துக்கு பிறகு நம்மோடு இருப்பார். நீங்கள் இதுவரை பார்க்காத மனோ பாலாவை இந்த படத்தில் பார்க்கலாம்.
காஜல் அகர்வால் இந்தியன் 2ல் இல்லை. இந்தியன் 3ல் தான் இருக்கிறார். இந்த படத்தை வேற தயாரிப்பாளர் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சுபாஸ்கரன் தான் தயாரிப்பதாக கூறினார். இந்த படம் சிக்கலில் மாட்டி 2, 3 வருட காலமாக நகராமல் இருந்தபோது, உதயநிதி ஸ்டாலின் உதவியதால் படம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. கடந்த 6, 7 வருடங்களாக என் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டமான காலகட்டம். அவரவர் அவங்க வேலையை சரியாக செய்ய வேண்டும்; தவறு செய்யக்கூடாது; அதுதான் தேசப்பற்று” என்று இயக்குநர் சங்கர் பேசினார்.
இதையும் படிங்க:'இந்தியன் 2' இசை வெளியீட்டு விழா: மிகச் சிறந்த கலைஞன்; நடமாடும் பல்கலைக்கழகம் - கமல் குறித்து நாசர் பெருமிதம்! - Indian 2 Audio Launch