சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது படைப்புகள் அனைத்தும் காலம் கடந்தும் பேசப்படுபவை. இவர் சமீபத்தில் நடிகர் தனுஷ் இயக்கிய ராயன் படத்தில் நடித்திருந்தார்.
இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கருத்துக்கள் மற்றும் தத்துவங்கள் பேசி வீடியோ வெளியிடுவார். அந்தவகையில், தற்போது மகாவிஷ்ணு விவகாரம் பெரிதாகி உள்ள நிலையில், அவரை மறைமுகமாக உதாரணம் காட்டி ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.
இதுகுறித்து செல்வராகவன் வெளியிட்டுள்ள வீடியோவில், "என்னங்க யாரோ ஒருத்தர், எதையோ உளறிக்கிட்டு நான் ஆன்மீக குரு என்று கண்டதை எல்லாம் பேசிக்கொண்டு இருந்தால் உடனே நீங்களும் ஒப்புக்கொள்வீர்களா? நூறு பேர் போய் முன்னாடி உட்காந்துட்டு கண்ணை மூடி விடுவீர்களா?. உண்மையான குருவை நீங்கள் தேடி போக வேண்டாம். அவரே உங்க முன்னாடி வருவார். உங்கள் சந்திப்பு தானாக நடக்கும். டிவியில் விளம்பரம் செய்து உங்களுக்கு நான் தியானம் சொல்லித் தருகிறேன் என்று உண்மையான குரு தன்னை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்.
என்னங்க நீங்க அவ்ளோ காய்ஞ்சு போயா கிடக்குறீங்க? தியானம் பண்ணறதுக்கு? தியானம் தான் உலகத்தில் சுலபமான விஷயம். உலகத்தில் உள்ள எல்லா கடவுள்களும் போதிக்கிறது கடவுள் உங்களுக்குள் இருக்கிறார் என்பதுதான். உலகத்தில் சுலபமான விஷயத்தை நமது ஈகோ உடனே ஒப்புக்கொள்ளுமா? அதுக்கு கஷ்டப்பட வேண்டும்.