சென்னை: ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் கே.இ. ஞானவேல்ராஜா தயாரிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள படம் தங்கலான். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், “ஞானவேல்ராஜாவுடன் படம் பண்ண வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
தங்கலான் படத்தின் பட்ஜெட்டில் சிக்கல் இருந்தது. அப்போது ஞானவேல்ராஜா மிகவும் உதவியாக இருந்தார். அந்த நன்றியை வெற்றியாக கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தம்பியாக உங்களுக்கு வெற்றியை கொடுக்க ஆசைப்படுகிறேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
சினிமா வாழ்வின் ஒரு அங்கமாக ஆனது. அதனால் சினிமாவை சரியான முறையில் கையாள விரும்பினேன். திரைப்பட விழாவில் நான் பார்த்த படங்கள் தான் என்னை உருவாக்கியது. நான் படம் எடுத்தால் நமக்கான பிரச்சனைகளை எடுத்து சொல்லலாம் என்று தான் நான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன். இங்கு சொல்லப்படாத கதைகள் உள்ளது. அதனை சினிமாவில் தான் கூற முடியும். சமூகத்தின் பிரதிபலிப்பாக அந்த படங்கள் இருந்தது. நாம் படம் எடுத்தால் நம் வலியை, பிரச்சனைகளை பேசலாம்.
வரலாற்றில் நான் யார் என்பதே பெரிய கேள்வியாக உள்ள நிலையில், பல பாகுபாடு, பிரிவினைகள் இருக்கிறது. அதில் பாதிக்கப்பட்ட மக்களின் வலிகள் இல்லை. அந்த தேடலோடு தான் சினிமாவுக்கு வந்தேன். சினிமா மக்களுடன் நெருக்கமாக இருக்கிறது. சொல்லவிடாமல் மறைக்கப்பட்ட வரலாற்றை எப்படி வெளியே கூறுவது என்பதை தான் என் படம் மூலமாக நான் தேடுகிறேன். சினிமாவில் வந்து புரட்சி செய்துவிடலாம் என்று தான் சினிமாவிற்கு வந்தேன். எனக்கு இந்த பயத்தை எல்லாம் போக்கியது வெங்கட் பிரபுவின் சென்னை 28 படம் தான். கிட்டத்தட்ட என் வாழ்கையும் அது தான்.
எளிதாக மக்களுடன் கனெக்ட் ஆக முடியும் என்பதை வெங்கட் பிரபுவிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அட்டக்கத்தி படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு எடுத்த மெட்ராஸ் படம் பிடித்ததால் தான் நடிகர் ரஜினிகாந்த், கபாலி, காலா படங்களை இயக்க வாய்ப்பு கொடுத்தார். ரஜினிகாந்திற்கு நான் பேசும் அரசியல் பிடிக்கும். மற்ற கமர்சியல் நடிகர்களை பார்ப்பது போல் விக்ரமை பார்க்க முடியவில்லை. அவர் கலையை மிகவும் நேசிக்கக் கூடியவர். எனது படத்தில் விக்ரம் நடிப்பாரா நாம் சொல்வதை அவர் கேட்பாரா என்று சந்தேகம் இருந்தது.