சென்னை: கோல்டன் ஸ்டுடியோ சார்பில், நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் 'தி ப்ரூஃப்' (THE PROOF). இப்படத்தில் சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ருத்வீர் வதன், மைம் கோபி, ரித்விகா, இந்திரஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், யூகி சேது, பாடலாசிரியர் சினேகன், ரோபோ சங்கர், நடிகர் சந்தோஷ் பிரதாப் உட்பட பல திரை பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது, "படத்தில் எல்லாமே மிக நன்றாக உள்ளது. ஒரு கிளாஸ் இயக்குநர் உருவாக்கியது போல மிக நன்றாக வந்துள்ளது. ராதிகா மிகவும் சிம்பிள், நல்ல திறமைசாலி. இப்ப சினிமா டிரெண்ட் மாறியிருக்கு. இயக்குநர்கள் நடிக்கிறார்கள், டான்ஸ் மாஸ்டர், நடிகர்கள் இயக்குகிறார்கள்.
ஆனால், எல்லோரையும் வரவேற்பது தான் சினிமா. மேக்கிங் ஸ்டைல் தெரியாமலே இப்போது படம் எடுக்கிறார்கள். அது சில நேரம் ஹிட் ஆவதால் அதைச் சரி என நான் சொல்ல முடியாது. எந்த இடத்தில் எந்த ஷாட் வைக்க வேணும் எங்கு இண்டர்வெல் விட வேண்டும் என்பதை உதவி இயக்குநர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இப்போது போதைப் பொருள் தான் டிரெண்ட். அதை வைத்து நாம் சம்பாதிக்கிறோம்.
பெரிய ஹிரோக்கள் இப்போது கதையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. காம்பினேசன் சரியாக அமைந்தால் போதும் என நினைக்கிறார்கள். நடிகர் சிவாஜி காலத்தில் இப்படியா இருந்தது? எல்லா புராணங்களையும் அவர் வழியில் தான் பார்த்திருக்கிறோம். அது தான் டிரெண்ட்.
ராதிகா உன்னை எல்லாரும் குழப்புவார்கள். அதைப் பற்றி நினைக்காதீர்கள். இன்றைய காலத்திற்குத் தேவையான கதையை எடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள். ருத்விக் மிகக் கட்டுக்கோப்பான உடற்கட்டுடன் இருக்கிறார். அவரை நான் ஹீரோவாக்க நினைத்தேன். அதற்குள் ஹீரோவாகி விட்டார். வாழ்த்துக்கள். தன்ஷிகா நடிப்பு பிரமாதமாக உள்ளது.
நல்ல ஆக்சன், கிளாமர் என எல்லாம் அவருக்குச் சிறப்பாக வருகிறது. ராதிகா மிகவும் திறமையாகப் படத்தை மேக்கிங் செய்துள்ளார். தயாரிப்பாளர் கோமதிக்கு வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், தம்பி தீபக் பெரிய இசையமைப்பாளராக வருவதற்கு வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் அப்பா என் படங்களுக்கு வயலின் வாசித்துள்ளார். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்". என்று பேசினார்.
நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது, "இத்திரைப்படத்தில் என் மகளுக்கு நல்ல வாய்ப்பு வழங்கிய, ராதிகா மாஸ்டருக்கு நன்றி. ராதிகா மாஸ்டரின் திறமைக்கு இனி ஃபுரூஃபாக இந்தப்படம் இருக்கும் வாழ்த்துக்கள். பெண்களை ஆண்கள் தடுக்கிறார்கள் எனச் சொன்னார்கள், பெண்களுக்கு வாய்ப்பு தந்து அழகு பார்ப்பது ஆண்கள் தான் என்பதை இங்குச் சொல்லிக்கொள்கிறேன். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி" என்று பேசினார்.
இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது, "ராதிகாவை நான் வாடி போடி என்று தான் கூப்பிடுவேன். அவள் எனக்கு அந்தளவு நெருங்கிய தோழி. நானும், அவளும் சினிமாவில் அசிஸ்டெண்டாக இருந்த காலத்திலிருந்து தெரியும். நான் படம் பண்ண ஆரம்பித்த போது, அவளைத் தான் முதலில் கூப்பிட்டேன். ஆனால், வர மாட்டேன் என்றாள், முதல் மூணு படத்திற்கும் கூப்பிட்டேன் வரவில்லை. ஆனால், அவளே ஒரு நாள் கூப்பிட்டு நான் ரெடி சார் எனச் சொன்னாள்.