சென்னை: இயக்குநர் பாலா வணங்கான் திரைப்பட ப்ரமோஷனில் நடிகர் விஜய் குறித்தும், ரசிகர்களின் பொதுவான மனநிலை குறித்தும் பேசியுள்ளார். இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய், சமுத்திரகனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் வணங்கான். இத்திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இயக்குநர் பாலா திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் பாராட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
அந்த விழாவில் நடிகர்கள், அருண் விஜய், சிவக்குமார், சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் வணங்கான் திரைப்பட ப்ரமோஷனில் இயக்குநர் பாலா அவரை பற்றி பேசப்படும் சர்ச்சைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் தனியார் பத்திரிகை விருது வழங்கும் விழாவில் இயக்குநர் பாலா, நடிகர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது விஜய் நிகழ்ச்சிக்கு வந்த போது, அவருக்கு இயக்குநர் பாலா எழுந்து நின்று மரியாதை அளிக்கவில்லை என சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலில் இயக்குநர் பாலாவிடம் கேட்ட போது, “நான் அவர் வந்ததை கவனிக்கவில்லை. அப்படியே இருந்தாலும் நான் ஏன் விஜய் வந்தால் எழுந்து நிற்க வேண்டும், அவர் என்னை விட வயதில் சிறியவர். நான் வேண்டுமென்றே அவரை அவமானப்படுத்த வேண்டும் என அவ்வாறு செய்யவில்லை” என்றார்.