சென்னை: ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டப்பிங் முடிவடைந்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் அர்ஜூன் தாஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் தற்போது அஜித் நடித்துள்ளார்.
'குட் பேட் அக்லி' படத்தில் அஜித் வித்தியாசமான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கியது முதல் அஜித்தின் பல கெட்டப்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படத்தில் அஜித்துடன் டப்பிங் பணிகளில் பணிபுரிந்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “ஒவ்வொரு வருடமும் உங்களது குரலை தியேட்டரில் கேட்க காத்திருப்பேன். தற்போது கடவுள் மற்றும் இந்த பிரபஞ்சத்தின் அருளால் உங்களது படத்தை இயக்கி, டப்பிங் பணிகளில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு குட் பேட் அக்லி என்ற அற்புதமான பயணத்துடன் தொடங்கி நிறைவடைந்தது. உங்களுடன் பணிபுரிந்த நினைவுகள் எப்போதும் பொக்கிஷமாக இருக்கும். அஜித் சாருக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.