சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர். தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் வெற்றி வாகை சூடி வருகிறார்.
ஏற்கனவே சிறந்த நடிகர் என பெயர் பெற்று தேசிய விருதுகளை பெற்றுள்ள தனுஷ், தற்போது இய்க்குநராகவும் கலக்கி வருகிறார். தனுஷ் தனது இயக்கத்தில் முதல்முறையாக இயக்கிய திரைப்படம் பவர் பாண்டி. இந்த படத்தில் தனுஷுடன் ராஜ்கிரண், ரேவதி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, தனது 50வது படமாக ராயன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது.
மேலும், ஏ.ஆர்.ரகுமான் இசையில் அடங்காத அசுரன், ஓ ராயா ஆகிய பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 3வது படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இளைஞர்களைக் கவர்ந்தது.