சென்னை: பிரபல நடிகரும், நடனக் கலைஞருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் கடந்த சனிக்கிழமை(பிப்.22) பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபுதேவாவின் ரசிகர்கள், பல்வேறு திரை பிரபலங்கள் என பலரும் பங்கேற்றனர்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என கொண்டாடப்படும் பிரபுதேவா, நடன இயக்கம், நடிப்பு, இயக்கம் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் பிரபுதேவா, இதுவரை தனது நடன நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்க்க நேரடியாக எங்கும் நடத்தியதில்லை. இதுதான் முதல் முறை இப்படி ஒரு நடன நிகழ்ச்சியை நடத்துவது.
அருண் ஈவென்ட்ஸ் நிறுவனம் ஒருங்கிணைத்த பிரபுதேவாவின் இந்த லைவ் நடன நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப் 22ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. அதிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியது. இந்நிலையில் பிரபுதேவாவின் லைவ் நடன நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை பிரம்மாண்டமாக அரங்கேறியது.
தொடர்ந்து 100 நடன கலைஞர்களின் மத்தியில் ‘ஊர்வசி ஊர்வசி’ பாடலுடன் பிரபுதேவா அரங்கம் அதிர நடன நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நடன இயக்குநர் சாண்டி, நடிகர்கள் பரத், சாந்தனு, நாகேந்திர பிரசாத். நடிகைகள் லட்சுமி ராய், ரித்திகா சிங், சானியா ஐயப்பன், ஜனனி, ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்டோர் பிரபுதேவாவுடன் இணைந்து நடனமாடி, ரசிகர்களை மகிழ்வித்தனர்.
இந்நிகழ்வில், நடிகர் பாக்யராஜ், வடிவேலு, எச்.ஜே.சூர்யா, தனுஷ் நடிகைகள் ரம்பா, மீனா, ரோஜா, சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பிரபுதேவாவின் ’காதலன்’ திரைப்படத்திலிருந்து ’பேட்ட ராப்’ பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்த பிரபுதேவா மேடைக்கு கீழ் உட்கார்ந்திருந்த நடிகர் வடிவேலு அருகில் வந்து சேட்டைகள் செய்தார். வடிவேலும் பதிலுக்கு முகபாவனைகளை மாற்றி பாடலுடன் சேர்ந்து சேட்டை செய்தார்.
தொடர்ந்து பாடலுக்கு நடனமாடியபடியே வடிவேலுவின் தலை முடியை கலைத்து போட்டார் பிரபுதேவா. இருவரின் செயல்களையும் பார்த்த ரசிகர்கள் கத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து காத்தடிக்குது பாடல் ஒலிக்க திடீரென எஸ்.ஜே.சூர்யா பிரபுதேவாவுடன் இணைந்து நடனமாட தொடங்கிவிட்டார். இதனால் ரசிகர்கள் இன்னும் உற்சாகமானார்கள். மேலும் நிகழ்ச்சியில் ரௌடி பேபி பாடலுக்கு தனுஷும் பிரபுதேவாவும் இணைந்து நடனமாடினர்.
1994ஆம் ஆண்டு வெளியான காதலன் திரைப்படத்தின் பேட்ட ராப் பாடலில் பிரபுதேவா, வடிவேலு இருவரது காம்போவும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. மிக வேகமாக செல்லக்கூடிய அப்பாடலில் நடனம் மட்டுமல்லாமல் இருவரும் மாறி மாறி செய்யும் சேட்டைகள் தான் ஹைலைட். அதனை நிகழ்ச்சியில் மறுபடி நிகழ்த்தி காட்டினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:”ஜெயலலிதா இல்லாவிட்டாலும் அவரது நினைவுகள் நிலைத்திருக்கும்”... ரஜினிகாந்த் புகழாரம்
இப்படியாக ரசிக்கும்படியான விஷயங்கள் நடந்தாலும் குறைகளும் விமர்சனங்களும் எழாமல் இல்லை. நிகழ்வு ஏற்பாடுகளில் குளறுபடி, ஒழுங்கான இட வசதியில்லை என பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. முக்கியமாக நடன நிகழ்ச்சி என கூறிவிட்டு பல்வேறு திரைபிரபலங்களை அழைத்து விருது நிகழ்ச்சி மாதிரி நடத்துகிறார்கள். பிரபுதேவா நிறைய பாடல்களுக்கு முழுமையாக நடனமாடவில்லை.
மேலும் நடன நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் ஆடுவதற்கு இடம் இருக்க வேண்டும். ஆனால் மூச்சு முட்டும் அளவிற்கு கூட்டமாக இருக்கிறது. ஒலியமைப்பும் தரமாக இல்லை. பாடல்கள் கேட்கவில்லை. மேடையில் நடப்பதும் ஒழுங்காக தெரியவில்லை. நடன நிகழ்ச்சி என வந்து ஏமாந்ததுதான் மிச்சம் எனவும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே இந்நிகழ்வில் நடனமாட இருந்த நடிகை ஸ்ருஷ்டி கடைசி நேரத்தில் நிகழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இது தொடர்பாக ஸ்ருஷ்டி,”பொய்யான வாக்குறுதிகளும், நிறைவேற்றப்படாத உறுதிமொழிகளும் ஏமாற்றமளிக்கின்றன. திட்டமிடுவதிலும், சம்பந்தப்பட்ட கலைஞர்களை மதிப்பதிலும் கிரீயேட்டிவ் குழுவினர் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இவை தான் என் முடிவுக்கு காரணம்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.