சென்னை: பிரபல நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படம் இன்று(ஜூலை 26) தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ராயன் படத்திற்கு ஓம் பிராகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் ராயன் தனுஷின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ராயன் படத்திற்கு ஆரம்பம் முதல் பெரியளவில் எதிர்பார்ப்பு இல்லாத நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியானது முதல் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆக்ஷன் கலந்த டிரெய்லர் வெளியான நிலையில் ராயன் படத்திற்கு சென்சார் குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
மேலும் ராயன் திரைப்படத்திற்கு இன்று காலை 9 மணி முதல் சிறப்பு காட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை காசி திரையரங்கில் தனுஷ் ரசிகர்கள் பெரிய பேனர்கள் வைத்து கொண்டாடி வருகின்றனர். மேலும் சென்னையில் உள்ள பல முக்கிய திரையரங்குகளில் தனுஷ் ரசிகர்கள் ராயன் பட வெளியீட்டை கொண்டாடி வருகின்றனர்.