டெல்லி: தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. முன்னணி நடிகையாக வலம் வரும் இவரது வீடியோ ஒன்று ஆபாசமான முறையில் சித்தரிக்கப்பட்டுக் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இணையதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து வீடியோவை பார்த்த ராஷ்மிகாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மிகவும் ஆபாசமான முறையிலிருந்த அந்த வீடியோவை சிலர் உண்மையானது எனவும் சிலர் போலியானது என்றும் கூறி இணையத்தில் விவாதித்து வந்தனர். இந்நிலையில் ராஷ்மிகாவின் அந்த வீடியோ டீப் பேக் முறையில் உருவாக்கப்பட்டிருந்தது பின்னர் தெரிய வந்தது.
இதையும் படிங்க: 25 ஆண்டை நிறைவு செய்யும் ‘துள்ளாத மனமும் துள்ளும்’.. எஸ்.எழில் கொண்டாட்ட விழாவிற்கு விஜய் வருகிறாரா?
பிரபலங்களின் முகங்களை வேறொருவரது உருவங்களோடு சேர்த்து டீப் பேக் முறையில் உருவாக்கப்பட்டு வந்த இந்த தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என பலரும் குற்றம் சாட்டி வந்தனர். தொடர்ந்து, ராஷ்மிகாவின் வீடியோ குறித்துக் கடந்த நவம்பர் 10ஆம் தேதி டெல்லி போலீசார் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தல், அடையாள திருட்டு, தனியுரிமை மீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இன்று ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோவை உருவாக்கியவராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த நபர் தென்னிந்தியாவில் கைது செய்யப்பட்டு பின் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: “நானும் உதயநிதியும் ஒரே வீட்டில் பொண்ணு எடுத்திருக்கோம்” சிங்கப்பூர் சலூன் பட விழாவில் ஆர்.ஜே.பாலாஜி கலகல!