சென்னை: பின்னணிப் பாடகி உமா ரமணன்(69), உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னை அடையாறு, காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு உயிரிழந்தார். தொடர்ந்து, உமா ரமணனின் இறுதிச் சடங்குகள் இன்று (மே 2) மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரியின் மகளாக உமா ரமணன், தந்து பெற்றோரின் விருப்பத்திற்கான இசை கற்றுக் கொள்ளத் துவங்கினார். அதனைத் தொடர்ந்து, இசையில் மேல் ஏற்பட்ட பிரியத்தால், கல்லூரி காலங்களிலேயே பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, மேசையில் இசைக் கச்சேரி நடத்தி வந்த ஏ.வி.ரமணனின் சந்திப்பு உமா ரமணன் வாழ்க்கையையே மாற்றியது. ஏ.வி.ரமணன் மற்றும் உமா ரமணன் இருவரும் இணைந்து ஆயிரக்கணக்கான மேடை கச்சேரிகளைச் செய்துள்ளனர்.
அதையடுத்து, இசையமைப்பாளரும், 70-களில் பின்னணி பாடகரும் ஏ.வி.ரமணனை பின்னணி பாடகியான உமா ரமணன் திருமணம் செய்து கொண்டார். தற்போது, இவர்களுக்கு விக்னேஷ் ரமணன் என்கிற மகன் ஒருவர் உள்ளார். முதன்முதலாக ஏ.வி.ரமணன், உமா ரமணன் இருவரும் இணைந்து ‘பிளே பாய்’ என்ற இந்தி திரைப்படத்தில் பாடினர். தொடர்ந்து இருவரும் பல்வேறு பாடல்களை பாடி வந்த நிலையில், இசைஞானி இளையராஜா இசையில் 1980ஆம் ஆண்டு வெளிவந்த 'நிழல்கள்' படத்தில் இடம் பெற்ற "பூங்கதவே தாழ் திறவாய்" என்ற பாடல் மூலம் உமா ரமணன் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து, பன்னீர் புஷ்பங்கள், கோயில் புறா, பகவதி புரம் ரயில்வே கேட், பாலநாகம்மா, நண்டு, தூறல் நின்னு போச்சு, மெல்ல பேசுங்கள் கைதியின் டைரி, புதுமைப் பெண், புது வசந்தம், அரங்கேற்ற வேளை போன்ற பல படங்களில் மனதைக் கவரும் பல பாடல்களை பாடி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே தனது இசையால் கட்டி வைத்திருந்தார் என்றால் மிகையாகாது. மேலும், நிழல்கள், வைதேகி காத்திருந்தாள், திருப்பாச்சி என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.