திருச்சி :திருச்சி எல்.ஏ திரையரங்கில் லப்பர் பந்து திரைப்பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, நடிகர் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், நடிகைகள் சுவாசிகா விஜய், சஞ்சனா, ஒளிப்பதிவாளர் தினேஷ் ஆகியோர் இன்று( செப் 22) காலை திரையரங்கிற்கு படத்தின் இடைவேளையில் வருகை தந்து திரைப்படத்தை கண்டுரசித்த ரசிகர்களுடன் பேசினர். ரசிகர்கள் நடிகர் நடிகைகளை சூழ்ந்து கொண்டு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மேடையில் பேசிய நடிகர் அட்டகத்தி தினேஷ்,"படத்தைக் கண்டு ரசிக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. அன்பாக இருக்கும் அனைவருமே கெத்து தான்" என தெரிவித்தார். பின்னர், பேசிய ஹரிஷ் கல்யாண், "பார்க்கிங் திரைப்படம் வெளியான போதும் இந்த திரையரங்கிற்கு நான் வந்து ரசிகர்களை சந்தித்தேன். மறுபடியும் திருச்சி வருவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் அனைவரும் ஆரவாரமாக ரசித்து இந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தங்களது அன்புக்கு நன்றி" என்றார்.
பின்னர் பேசிய நடிகை சஞ்சனா, "நான் திருச்சியில் தான் பத்து வருடங்கள் இருந்தேன். நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திருச்சி வந்துள்ளேன். இடைவேளைக்குப்பின் படம் இன்னும் நன்றாக இருக்கும். நீங்கள் அனைவரும் ரசித்து பார்ப்பீர்கள்" என்றார்.
லப்பர் பந்து படக்குழுவினர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) பின்னர் பேசிய சுவாசிகா, "நான் முதல்முறையாக திருச்சிக்கு வருகிறேன். படம் இன்னும் சிறப்பாக இருக்கும். நீங்கள் அனைவரும் என்ஜாய் செய்வீர்கள்" என்றார். பின்னர் திரையரங்கில் நடிகைகள் மற்றும் நடிகர்கள் ரசிகர்களுடன் செல்பி எடுத்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹரிஷ் கல்யாண், "மக்கள் இந்த திரைப்படத்தை மிகவும் கொண்டாட்டத்துடன் ரசித்து பார்க்கின்றனர். எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகம் முழுவதும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :"சுயமரியாதை ரெம்ப முக்கியம்.. மன்னிப்பு கேட்டே ஆகனும்..” - சிம்ரன் காட்டமான பதிவு!
இந்த திரைப்படத்தில் விஜய் ரசிகனாக நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் பாடல்கள் வரும் பொழுது ரசிகர்கள் அதை கொண்டாடுகின்றனர். அவரின் ரசிகராக நான் நடிக்கும் பொழுது மக்கள் அதை கொண்டாடுவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது" என்றார்.
நடிகை சஞ்சனா பேசும்பொழுது, "நான் திருச்சி மான்போர்ட் பள்ளியில் தான் பத்து வருடங்கள் படித்தேன். நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திருச்சி வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தற்பொழுது மக்கள் என்னை வரவேற்கும் விதம் எனக்கு நம்ப முடியாதபடி உள்ளது. அனைவரும் திரைப்படத்தை நண்பர்கள், குடும்பத்துடன் வந்து பார்த்து படம் எப்படி இருக்கிறது என்று கூறுங்கள்" என்றார்.
பின்னர் அட்டகத்தி தினேஷ் மற்றும் இயக்குநர் தமிழரசன், "நீண்ட வருடங்களுக்குப் பிறகு அனைத்து தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் படமாக இத்திரைப்படம் உள்ளது. இது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரின் பணி சிறப்பாக இத்திரைப்படத்தில் அமைந்துள்ளது. இத்திரைப்படத்தை பற்றி மோசமான கருத்துக்களை இதுவரை எந்த விமர்சனங்களிலும் கூறவில்லை என்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இத்திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் ரெஃபரன்ஸ் வருவது இயக்குநர் கதை சொல்லும் போதே இருந்தது. நடிகர் அட்டக்கத்தி தினேஷ் கதை கேட்கவில்லை. நீங்கள் இத்திரைப்படத்தில் விஜயகாந்த் ரசிகன் என்று கூறிய உடனே அவர் ஒப்புக் கொண்டார்.
நான் விஜயகாந்தின் ரசிகன். நான் முதல் படம் எடுத்தால் அதில் விஜயகாந்தை கொண்டாட வேண்டும் என நினைத்தேன் அதன்படியே இத்திரைப்படத்தை எடுத்தேன். மேலும், எங்கள் ஊரில் பெரும்பாலான வீடுகளில் கேப்டன் விஜயகாந்தின் புகைப்படம் இருக்கும். அதனால் அதையே நான் திரைப்படத்தில் பயன்படுத்தினேன்" என இயக்குநர் தெரிவித்தார்.