சென்னை: நாளை விக்கிரவாண்டி வி.சாலையை எதிர்நோக்கி தான் தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பார்வையும் உள்ளது. விஜய்யின் முதல் அரசியல் மாநாடு எப்படி நடக்கும், அவர் என்ன பேசப் போகிறார், அவரது கொள்கை என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். விஜய் அரசியல் கட்சி தொடங்கி ஆறு மாதத்திற்கு பிறகு நாளை முதல் மாநாட்டை நடத்துகிறார். ஆனால் விஜய் முன்னதாக தனது சினிமா நிகழ்ச்சி மேடைகளில் தனது அரசியல் வரவு குறித்து சூசகமாக தெரிவித்து வந்துள்ளார். தனது குட்டிக் கதைகள் மூலம் பலமுறை அரசியல்வாதிகளை சாடியுள்ளார்.
விஜய் நடித்த தலைவா படத்தில் ‘time to lead’ என்ற வசனம் இடம்பெற்றிருந்தது. இந்த வசனத்தால் படத்தின் ரிலீசின் போது பிரச்சனை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து விஜய் பேசிய பல மேடைகளில் அரசியல் வரவுக்கான ஹின்ட் கொடுத்துள்ளார். மேலும் விஜய் நடித்த கத்தி படத்தை தயாரித்தது லைகா நிறுவனம். அப்போது இலங்கையை சார்ந்த நிறுவனத்திற்கு விஜய் வாய்ப்பு கொடுக்கிறார் எனவும், விஜய் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கிறார் எனவும் குற்றம்சாட்டினார்.
திருநெல்வேலியில் கத்தி படத்தின் 50வது நாள் விழாவில் விஜய் பேசுகையில், “நமக்கு எந்தளவிற்கு ஆதரவு இருக்கிறதோ, அந்தளவிற்கு எதிர்ப்பும் உள்ளது. தட்டி பறிக்கவும் கூடாது, விட்டுக் கொடுக்கவும் கூடாது. நம்மகிட்ட எதிரி அன்பா பேசுனா அன்பா பேசனும், வேற மாதிரி பேசுனா வேற மாதிரி பேசனும்” என்றார்.
இதனைத்தொடர்ந்து புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில், “நான் சந்தித்த அவமானங்களை என்னை எரிக்கும் நெருப்பாக எடுத்துக் கொள்வதில்லை. என்னை வேகப்படுத்தும் பெட்ரோலாக எடுத்துக் கொள்கிறேன்” எனக் கூறிவிட்டு முதல் முறையாக எம்ஜிஆர் படமான "பல்லாண்டு வாழ்க" என்ற படத்தின் கதையை எடுத்துக்காட்டாக கூறி இருப்பார்.
இதையும் படிங்க:விஜயின் அரசியல் கன்னி மேடை! முழுவீச்சில் தயாராகியிருக்கும் வி.சாலை
மெர்சல் படத்தின் ஆடியோ விழாவில் விஜய், “அவ்வளவு ஈசியா நம்மள வாழ விடமாட்டாங்க, நாலா பக்கமும் பிரஷர் இருக்கும், அதை தாண்டி தான் வரணும்” என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து 2017இல் வெளியான மெர்சல் படத்தின் போது ஜோசஃப் விஜய் எனக் கூறியது போல பிரச்சனை ஏற்பட்டது.
தமிழக பாஜகவில் எச்.ராஜா முதல் நிர்வாகிகள் அனைவரும் விஜய்க்கு எதிராக கொதித்து எழுந்த நிலையில், அது தேசிய அளவில் பெரும் பிரச்சனையாக வெடித்தது. சர்கார் அரசியல் சார்ந்த படம் என்பதால் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் வெளிப்படையாக தனது அரசியல் ஆசையை தெரிவித்தார்.
அந்த பேச்சில் இயக்குநர் முருகதாஸை குறிப்பிட்டு, "மெர்சல்ல அரசியல் இருந்தது, இதுல அரசியல்ல மெர்சல் பண்ணிருக்கார்" என கூறியிருந்தார். மேலும் "வெற்றிக்காக எவ்வளவு வேணாலும் உழைக்கலாம், நாம வெற்றி பெற கூடாதுன்னு ஒரு கூட்டம் உழைக்கிறது. நாங்கள் சர்கார் அமைச்சிட்டு தேர்தல்ல நிக்கப் போறோம்" என்றார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர் பிரசன்னா, நிஜத்தில் முதலமைச்சர் ஆனால் நடிப்பீர்களா என கேட்பார். அதற்கு விஜய், “முதலமைச்சர் ஆனால் நடிக்கமாட்டேன்” என்பார்.
அந்த மேடையில் பதவி குறித்து விஜய் கூறியிருந்தாலும், அப்போதே கட்சி தொங்கினால் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்பதையும் ரசிகர்களுக்கு சூசகமாக கூறியுள்ளார். இந்த பேச்சுகளை விடவும் வெளிப்படையாக லியோ வெற்றி விழாவில் விஜய், “2026இல் கப்பு முக்கியம் பிகிலு” என கூறினார்.
இதனையடுத்து சில மாதங்களில் அரசியல் கட்சி தொடங்கினார். நடிகர் விஜய் சீரான இடைவேளைகளில் தனது சினிமா மேடை பேச்சுக்கள் மூலம் அரசியல் விவாதங்களில் தன் பெயர் அடிபடுவதை உறுதி செய்து வந்துள்ளார். அவ்வப்போது மறைமுகமாக அரசியல் பேசி தனது ரசிகர்களை தயார்படுத்தி வந்த விஜய், நாளை முதல் அரசியல் மேடையை எவ்வாறு கையாளப் போகிறார் என்பதை காண தமிழ்நாடு மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்