சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’கோட்’ (Greatest Of all time) திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. பெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள கோட் படத்திற்கு விண்ணை முட்டும் அளவு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கோட், முன்பதிவில் ஏற்கனவே பல்வேறு வசூல் சாதனைகள் படைத்துள்ளது. கோட் திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறாதது படத்திற்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.
மேலும், கோட் படத்தின் பாடல்களும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியான டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, வெங்கட் பிரபு மற்றும் கோட் படத்தின் தயாரிப்பாளர் ஆகியோர் தீவிர புரமோஷனில் இறங்கியுள்ளனர். வெங்கட் பிரபு ஒரு பக்கம் படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறார் என்றால் அர்ச்சனா கல்பாத்தி, பிரேம்ஜி ஆகியோரது புரமோஷன்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
படத்தில் அஜித்தின் கேமியோ அல்லது வசனங்கள் என்று ஏதாவது ஒன்று இடம்பெறும் என தெரிகிறது. படம் ஓடும் மூன்று மணி நேரம் ரசிகர்கள் போனை தொட மாட்டார்கள் எனவும், அந்த அளவு திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும் எனவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். அதேபோல், கோட் கிளைமாக்ஸ் காட்சியில் தியேட்டர் அதிறும் எனவும் கூறியுள்ளார்.