ஹைதராபாத்:அல்லு அர்ஜூன் நடித்துள்ள ’புஷ்பா 2’ படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு வெளியாகியுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது ’புஷ்பா 2’. கடந்த 2021ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா முதல் பாகம் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது.
புஷ்பா முதல் பாகம் 350 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்காக அல்லு அர்ஜூன் தேசிய விருது வென்றார். இப்படத்தில் அல்லு அர்ஜூன் தனது ஒரு பக்க தோல்களை தூக்கி கொண்டு நடக்கும் ஸ்டைல் முதல் அவரது கதாபாத்திர வடிவமைப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. புஷ்பா முதல் பாகத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் டிரெய்லர் வெளியாகி படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இன்று ’புஷ்பா 2’ பிரமாண்டமாக வெளியாகி இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் புஷ்பா இரண்டாம் பாகம் உலக அளவில் 1000 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் புஷ்பா 2 திரைப்படம் 12,500 திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.