சென்னை: நடிகர் மாதவன், ஷாலினி இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ’அலைபாயுதே’. கடந்த 2000ஆம் ஆண்டில் வெளியான அலைபாயுதே திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அலைபாயுதே திரைப்படம் வெளியான போது மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.
இன்றளவும் காதல் காட்சிகளுக்கு ரெஃபரென்ஸாக அலைபாயுதே திரைப்படம் உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற சிநேகிதனே, பச்சை நிறமே, என்றென்றும் புன்னகை ஆகிய பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மான் திரைவாழ்வில் கிளாசிக் பாடல்களாக அமைந்தது. மேலும் அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற ‘உன் மேல ஆசைப்படல, உன்ன விரும்பல, ஆனா இதுலாம் நடந்துருமோன்னு பயமாயிருக்கு’ என்ற வசனம் இன்றளவும் ஆண்களின் பிக்கப் லைன்களாக வலம் வருகிறது.
இந்நிலையில் நடிகர் அஜித்தின் மனைவியான ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் மாதவனுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “என்றென்றும் புன்னகை” என்ற கேப்ஷனுடன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பகிர்ந்த மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஷாலினியையும் அவரது குடும்பத்தையும் பல வருடங்களுக்கு பிறகு சந்தித்ததில் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.