சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடந்தாண்டு பொங்கலுக்கு துணிவு திரைப்படம் வெளியானது. அதன்பிறகு, இதுவரை படம் எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருந்த படமும் கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அர்ஜூன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் அஜர்பைஜானின் தொடங்கியது.
மேலும், மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் அஜித் நடித்து வருகிறார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு குட் பேட் அக்லி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இதில் அஜித்குமார் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறாரா என்ற கேள்வியும் இந்த ஃபர்ஸ்ட் லுக்கின் மூலம் எழுந்தது. முன்னதாக, கடந்த 2006ஆம் ஆண்டு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த வரலாறு திரைப்படத்தில் அஜித்குமார் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், குட் பேட் அக்லி படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று மாலை 6.40 மணிக்கு இப்படத்தின் இரண்டாவது லுக் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, தற்போது இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அஜித்குமார் வேதாளம் பட தனித்துவ ஸ்டைல் போல் கையில் ஒரு ஸ்டைலை பதிவு செய்து ஜாலியாக இருப்பது போன்று உள்ளது. மேலும், இதில் அஜித் அணிந்திருக்கும் ஆடையில் 63 என்ற எண்ணும், அவரைச் சுற்றி துப்பாக்கிகளும் உள்ளன. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அஜித் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:திருப்பதி கோயிலில் நடிகர் அஜித் சுவாமி தரிசனம்! திடீர் தரிசனத்திற்கு இதுதான் காரணமா?