சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ’விடுதலை பாகம் 2’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் 25-ஆவது நாளை நிறைவு செய்துள்ளது. ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் இப்படத்தை தயாரித்திருந்தார். மஞ்சு வாரியர், கென் கருணாஸ், கிஷோர், கௌதம் மேனன் என பல நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
மிக நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த ’விடுதலை பாகம் 2’ திரைப்படமானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வந்தது. விடுதலை 2க்கு பின்பு சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகளே தொடங்கப்பட்டுள்ள நிலையில் வெற்றி மாறன் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி வெற்றி மாறன் தனது அடுத்த படத்தில் மீண்டும் நடிகர் தனுஷுடன் இணையவுள்ளார்.
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’, ‘அசுரன்’ என நான்கு படங்களைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இணைகிறது வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி . ’விடுதலை பாகம் 2’ வெளியாகி 25 நாட்களை நிறைவு செய்ததையொட்டி திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் வெற்றி மாறன் - தனுஷ் இணையும் படத்தைப் பற்றிய தகவல்களையும் வெளியிட்டுள்ளது.