சென்னை: தென்னிந்திய திரையுலகில் ஓகே கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். தமிழில் இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் தனுஷுடன் நடித்த திருச்சிற்றம்பலம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது தனுஷுடன் ராயன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். இந்த படம் ரொமான்ஸ், காமெடி கலந்த ஃபேண்டஸி கதையில் உருவாகிறது. தமிழ் சினிமா, அதிகமாக காதலில் தோல்வி அடைந்த பல ஆண் கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் காதலில் தோல்வி அடைந்த பெண்ணாக நித்யா மேனன் நடிக்கிறார்.