ராணிப்பேட்டை:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்துக்குள்ளான நிலையில், காயங்களின்றி நடிகர் யோகி பாபு உயிர் தப்பியுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் அந்த தகவல் தவறானது என நடிகர் யோகி பாபு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக அதிகாலை 3 மணியளவில் பெங்களூரு நோக்கி நடிகர் யோகி பாபு காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, கார் வாலாஜாபேட்டை சுங்கச் சாவடியைக் கடந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற ஈச்சர் லாரி மீது மோதியுள்ளது. அப்போது, அந்த வெள்ளை நிறக் கார் விபத்துள்ளகுள்ளானது.
ஆனால், "இந்த விபத்தில் சிக்கிய நடிகர் யோகிபாபு அதிர்ஷ்டவசமாக எந்த காயங்களும் ஏற்படாமல் உயிர் தப்பியுள்ளார். பின், வேறு கார் வரவழைக்கப்பட்டு நடிகர் யோகி பாபு அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். இதனால், சுமார் அரைமணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது" எனத் தகவல் வெளியான நிலையில், இது தவறான தகவல் என யோக பாபு விளக்கமளித்துள்ளார்.