சென்னை:இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'ரத்னம்'. வரும் 26ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஷால், ஹரி, சமுத்திரக்கனி, யோகி பாபு, தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்சியில் நடிகர் விஷால் பேசுகையில், "மார்க் ஆண்டனி எனக்கு மிகப்பெரிய திருப்புமுனை கொடுத்தது. ரூ.100 கோடி என்ற அந்தஸ்தை கொடுத்தது. யாரும் ஆதிக் உடன் படம் பண்ண வேண்டாம் என்றார்கள். ஆனால், கதை மீது நம்பிக்கை இருந்தது. ஹரியிடம் போன் செய்து இருவரும் சேர்ந்து படம் பண்ணலாமா என்று கேட்டேன். அவரும் பண்ணலாம் என்றார். கதை கேட்டவுடன் கண்டிப்பாக பண்ணலாம் என்று சொன்னேன்.
ஹரி எனது படத்தில் எப்போதும் நாயகிக்கு முக்கியத்தும் கொடுப்பார். எல்லா இயக்குனர்களும் நடிகராகும் போது என்னைப் போன்ற நடிகர்களும் இயக்குனர் ஆகத்தான் வேண்டும்; வேறு வழியில்லை. இயக்குனர் ஹரி இப்படத்தில் ஐந்து நிமிட காட்சி ஒன்றை ஒரே ஷாட்டில் எடுத்தார். மிகவும் கஷ்டப்பட்டு எடுத்தனர்.
சிறிய படங்களுக்குத்தான் நான் போராடுகிறேன். இருக்கிற உண்மையை பேசினேன். எனது எமோஷனலை புரொமோஷனுக்கு பயன்படுத்தியது இல்லை. அரசியல்வாதிகள் நடிக்க வரும் போது நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது. நீங்கள் தேவையை பூர்த்தி செய்தால் நாங்கள் ஏன் வரப்போகிறோம்" எனப் பேசினார்.
திருமணம் பற்றி மனம் திறந்த விஷால்:இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறியதாவது, "அரண்மனை 4 படத்தை தள்ளிப்போக சொன்னது நான் அல்ல; எனக்கு அந்த அதிகாரம் இல்லை. எல்லா படமும் ஓட வேண்டும். சினிமாவில் போட்டி தவிர்க்க முடியாத ஒன்று. திருமணத்தை நான் அவாய்டு (Avoid) பண்ணவில்லை. திருமணம் என்பது ஒரு பெண்ணுடன் காலம் முழுவதும் பயணப்படுகிற விஷயம். அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். அதற்கு ஒரு கால அவகாசம் வேண்டும். கடவுள் எனக்கு ஒரு நேரம் கொடுப்பார் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 'நடிகர் சங்க கட்டடம் என்னைவிட கார்த்தியின் உழைப்பால் இந்த ஆண்டு கட்டி முடிக்கப்படும். சிறிய படங்கள் பற்றிய கேள்விக்கு நான் வெளிப்படையாக சொன்னால் சர்ச்சை ஆகிவிடும். சிறிய பட தயாரிப்பாளர்கள் எந்தவொரு அனுபவமும் இல்லாமல் வருவார்கள்.
அவர்களுக்கு ஒரு வழிகாட்டி இல்லை. தோனியும் படம் எடுத்தார்; என்ன ஆனது என்று அவரிடம் கேளுங்கள். நானும் படம் எடுத்தேன். அப்போது ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். திரையரங்குகளை மூட சொன்னார்கள். எனது நான்கு கோடி பணம் போச்சு. இந்த மே மாதத்தில் இருந்து டிசம்பர் வரை பெரிய மற்றும் சிறிய படங்களுக்கு மிகப்பெரிய டெஸ்ட் இருக்கு.
விஜய்க்கு வாழ்த்துகள். எனக்கு ரொம்ப பிடித்த மனிதர் நடிகர். அவரை வைத்து ஒரு படம் இயக்க எனக்கு ஆசை. ஆனால், அவர் கடைசி படம் என்று சொல்லிவிட்டார். நான் அரசியலுக்கு வருகிறேனோ? இல்லையோ? டிசம்பர் வெள்ளம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று கூறினார்.
இறுதியில் பயில்வான் ரங்கநாதன், "சின்னப் படங்கள் ஓடவில்லை என்கிறீர்கள். சமீபத்தில் ரிலீஸான மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு போன்ற படங்கள் எல்லாம் வெளியாகி வசூலில் சாதனை படைக்கத்தானே செய்தது" எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு நடிகர் விஷால் 'பதில் அளிக்க முடியாது' எனக் கூறினார்.
இதையும் படிங்க:த்ரிஷா முதல் பிரதீப் வரை.. மக்களவைத் தேர்தலில் ஆப்செண்ட் ஆன திரைப்பிரபலங்கள் யார்? - ரவுண்ட் அப்! - TN Lok Sabha Election vote