ஐதராபாத் :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் நடிகர் விஜயகாந்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு ஐந்து, ஆறு முறை எங்கள் வீட்டுக்கு வந்து இதுகுறித்து பேசினார்.
அதற்கு முன்பு என் மகன் சண்முகபாண்டியனிடமும் இது குறித்து அவர் பேசியிருந்தார். பிரச்சாரத்தின் நடுவே நான் சென்னை சென்றிருந்தபோது, என்னை நேரில் சந்தித்த அவர், கோட் திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்தை ஒரு காட்சியில் கோமியோவாக கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டார்.
விஜய்யும் தேர்தலுக்குப் பிறகு என்னை சந்திப்பதாக கூறியிருந்தார். விஜயகாந்த் இல்லாத இந்த நேரத்தில் அவருடைய இடத்தில் இருந்து தான் நான் யோசிக்க வேண்டும். அவர் இருந்திருந்தால் அவர் விஜய்க்கு என்ன சொல்லியிருப்பார்? செந்தூரப் பாண்டி என்ற படத்தில் விஜய்யை கேப்டன் அறிமுகப்படுத்தியது உலகத்துக்கே தெரியும். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீதும், விஜய் மீதும் அவருக்கு எப்போதும் மிகப்பெரிய பாசம் உண்டு.