சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய்சேதுபதி. இவர் தமிழ் தவிர தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் நேற்று (ஜூன்.14) மகாராஜா திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது இவரின் 50வது திரைப்படமாகும்.
இப்படத்தை குரங்கு பொம்மை படத்தின் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். இதற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை பேஸன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. குரங்கு பொம்மை படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், ஏழு வருடங்களுக்கு பிறகு இயக்குநர் நித்திலன் இப்படத்தை இயக்கி உள்ளார்.
இதில், விஜய்சேதுபதி, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், பாரதிராஜா, அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் அப்பா, மகளுக்குமான பாசத்தை மையப்படுத்தி பழிவாங்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்சேதுபதிக்கு கம்பேக் கொடுக்கும் வெற்றிப் படமாக மகாராஜா அமைந்துள்ளது.
படத்தில் சற்று வன்முறை அதிகமாக இருந்தாலும் விஜய்சேதுபதி நடிப்பு, பின்னணி இசை, நித்திலனின் நான் லீனியர் திரைக்கதை யுக்தி உள்ளிட்ட காரணங்களால் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் படம் வெற்றி பெற்றதையடுத்து இயக்குநர் நித்திலனுக்கு நன்றி தெரிவித்து முத்தம் கொடுத்து பாராட்டியுள்ளார் நடிகர் விஜய்சேதுபதி. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:'நெஞ்சு வலியிலும் படத்துக்காக உழைத்தேன்'- பித்தல மாத்தி பட தயாரிப்பாளர் சரவணன் நெகிழ்ச்சி! - pithala maathi movie