சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'எதற்கும் துணிந்தவன்'. அதற்குப் பிறகு ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் இந்தப் படத்திற்கு 'கங்குவா' என்று பெயரிடப்பட்டுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். கங்குவா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப்படம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கங்குவா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. பொங்கல் பண்டிகையையொட்டி படத்தில் சூர்யாவின் புதிய தோற்றம் வெளியிடப்பட்டது. அந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சூர்யா இந்தப் படத்தில் பல தோற்றங்களில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, "கங்குவா எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று" என சூர்யா அவரது X பக்கத்தில் பதிவிட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று(ஜன.27) கங்குவா படத்திலிருந்து பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோலின் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று(ஜன.27) பாபி தியோலின் பிறந்தநாள் என்பதால் படத்தில் அவரது தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.