சென்னை: இயக்குநர் சிவா குறித்து நடிகர் அஜித்குமார் கூறியதை கங்குவா திரைப்பட ப்ரமோஷனில் நடிகர் சூர்யா பகிர்ந்து கொண்டார். இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் கங்குவா. சூர்யா திரை வாழ்வில் பெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது.
கங்குவா திரைப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், உலகம் முழுவதும் ஓடிடியில் 38 மொழிகளில் வெளியாகிறது. ஏற்கனவே கங்குவா படத்தின் இரண்டு பாடல்கள் Fire song, Yolo ஆகியவை வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து கங்குவா திரைப்பட குழு தற்போது இந்தியா முழுவதும் தீவிர ப்ரமோஷனில் இறங்கியுள்ளது.
கங்குவா திரைப்பட ப்ரமோஷனில் நடிகர் சூர்யா பேசுகையில், “இது தமிழில் உருவாகியுள்ள பாகுபலி போன்ற திரைப்படம் என்றார். மேலும் இயக்குநர் சிவா குறித்து பேசுகையில், சிவாவுடன் நீங்கள் ஒருமுறை பணியாற்றினால், அவரை விட மனசே வராது. அவர் வேறோரு இயக்குநருடன் பணியாற்றுவதை பார்த்தால் பொறாமைப்படுவீர்கள். அந்த வகையில் படப்பிடிப்பு அனுபவம் நிறைவாக இருக்கும்” என்றார்.