சென்னை:1958ஆம் ஆண்டு பராகுவேயில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது சர்வதேச நண்பர்கள் தினம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து உறவுகளை விடவும் ஒருபடி மேலானது நட்பு. திருவள்ளுவர் கூட நட்பதிகாரம் என்று நட்புக்கென தனி அதிகாரமே எழுதியுள்ளார்.
எந்தவித ரத்த சம்பந்தமமுமின்றி நம் இறுதி நாட்கள் வரை உடன் பயணிக்கும் நண்பர்களை, நட்பை, கொண்டாட இப்படி ஒரு தினம் தேவைப்படத்தான் செய்கிறது. சமூக வலைத்தளங்களில் முஸ்தபா முஸ்தபா முதல் மீசைக்கார நண்பா என இணையவாசிகள் நண்பர்கள் தினத்தை சிறப்பிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த நண்பர்கள் தின நன்னாளில் தன்னுடைய நண்பர்கள் பற்றி நம்மிடம் பகிர்கிறார், 90களில் அனைத்து ஹீரோக்களுக்கும் உயிர் நண்பனாக நடித்து கலக்கிய நடிகர் ஸ்ரீமன்.
இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசிய ஸ்ரீமன், “நட்பில் இவர் சிறந்தவர், அவர் சிறந்தவர் என்று இல்லை. நட்பு என்றாலே சிறந்தது தான். உயிர் காப்பான் தோழன் என்று ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சர்க்கில் உண்டாகும். சின்ன வயதில் இருந்து நம்ம கூடயே இருந்து நாம் என்ன செய்தாலும் சகித்துக்கொண்டு, நமது வளர்ச்சிக்கு உதவியாக ஒரு ஏணி மாதிரி இருப்பார்கள். நல்லதுலயும் எல்லா விஷயத்திலும் அவங்க தான் கூட இருப்பாங்க. குடும்பத்தை தாண்டி நல்ல நண்பர்கள் அமையும் போது தான் எல்லோரும் அடுத்த கட்டத்திற்கு போக வாய்ப்பாக அமையும்.
நல்ல நண்பர்கள் கீழே விழுந்தவர்களை மேலே தூக்கி நிறுத்துவார்கள். என் வாழ்க்கையில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். எனக்கு சரிவு வரும் போது நிறைய நண்பர்கள் கைகொடுத்து தூக்கி விட்டனர். நட்பு என்பது ஒரு அதிர்ஷ்டம். சேது ஸ்ரீமன் மாதிரி நண்பன் கிடைக்க வேண்டும் என்று நிறைய பேர் சொல்வார்கள். சினிமாவில் நண்பனாக நடிப்பது என்பது வேறு, நட்பு என்பது வேறு. நிறைய இடங்களில் பிரண்ட்ஷிப் இருக்கும்.