கோவை: ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளன. கோவையில் அவினாசி சாலையில் உள்ள பிராட்வே திரையரங்கில் கோட் திரையிடப்பட்டது. ஐ-மேக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட இந்த திரையரங்கத்தில் காலை 7.30 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. 3 திரைகளில் வெளியாகியுள்ள இந்த படத்தை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகத்துடன் காண சென்றுள்ளனர்.
கோவை நகரின் பிற திரையரங்குகளில் காலை 9 மணி அளவில் கோட் படமானது திரையிடப்படுகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் பிராட்வே திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்து ரசித்தார்.
கோட் திரைப்படம் படம் துவங்குவதற்கு முன் ரசிகர்கள் நமது ஈடிவி பாரத்திடம் பேசுகையில், "நாங்கள் சேலத்தில் இருந்து கோட் படம் பார்க்க வந்துள்ளோம். இங்கு தான் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைத்தது நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். கோட் படம் சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என நம்புகிறேன்" என்றார் ரசிகர் ஒருவர்.