சென்னை:சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘கூலி’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ’கூலி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது.
முன்னதாக, இப்படத்தில் சவுபின் சபீர், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் வெளியானது. இந்நிலையில், இன்று பிரபல நடிகர் சத்யராஜ் கூலி படத்தில் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்துள்ளது. ராஜசேகர் என்ற கதாபத்திரத்தில் கூலி படத்தில் சத்யராஜ் நடிக்கிறார்.
சத்யராஜ் ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த ’மிஸ்டர் பாரத்’ படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக சத்யராஜ் நடிப்பதாக இருந்து, பின்னர் விலகியதாக படம் வெளியான காலகட்டத்தில் பேசப்பட்டது.