கோயம்புத்தூர்: இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் இயக்கத்தில் உருவான படம் 'கவுண்டம்பாளையம்'. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், அந்த படத்திற்கு எதிர்ப்பு வருவதாகவும், தனக்கு மிரட்டல் வருவதாகவும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் ரஞ்சித் நேரில் வந்து புகார் அளித்தார்.
நடிகர் ரஞ்சித் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) அதன் பின்னர் செய்தியாளர்களிக்கு பேட்டியளித்த அவர், "நாளை திரைக்கு வரவிருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடப்படாது, படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுகிறது. இது தொடர்பாக முதலமைச்சரையும், செய்தித்துறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்க உள்ளேன்.
இந்தப் படம் வெளியிடக் கூடாது என்பதில் பலர் முனைப்போடு இருக்கின்றனர். திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிரட்டல் உள்ளிட்டவை வருகின்றது. இது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சொல்லும் போது வருத்தமாக இருக்கிறது. நாடக காதலை பற்றியும், பெற்றோரின் வலியையும் படமாக எடுத்துள்ளேன்.
இப்படத்திற்கு சில இடங்களில் இருந்து எதிர்ப்பு வருவது வருத்தமளிக்கிறது. மேலும், ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமம் என்று எனக்கு தெரியும். என் வாயில் வந்த கருத்துக்கள் அனைத்தும் உண்மையே, நான் பொய் கூற மாட்டேன், நான் அரசியல்வாதி கிடையாது. மேலும், இந்த படத்தின் வெற்றிதான் என்னை எதிர்ப்பவர்களுக்கு நான் சொல்லும் பதில்.
சென்சார் சான்றிதழ் வாங்கியும் இந்த படத்தை என்னால் வெளியிட முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது. யார் எதிர்க்கிறார்கள் என்று நான் சொல்ல விரும்பவில்லை. திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டுகிறார்கள். திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் படம் பார்க்க வரும் மக்களின் பாதுகாப்பு கருதி படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளோம்.
தமிழக அரசின் அனுமதி பெற்று இந்த படத்தை விரைவில் வெளியிடுவோம். படத்தின் வெளியீட்டு நாளின் போது பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்வதற்காகத்தான் இந்த ஒத்திவைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் இருக்கும் நாட்டில் நல்ல கருத்துள்ள படத்தை எடுத்து வெளியிட முடியாமல் போவது வேதனையாக உள்ளது" எனக் கூறினார்.
இதையும் படிங்க:அனிமல், ஆர்ஆர்ஆர், பாகுபலி-2 படங்களை பின்னுக்குத் தள்ளும் கல்கி! ரூ.725 கோடியை தாண்டி வசூல் சாதனை!