சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் குரூப் நடனக்கலைஞராக திரைத்துறையில் நுழைந்து, படிப்படியாக உயர்ந்து, தற்போது முன்னணி நடிகராகவும் வலம் வருபவர். நடிப்பு மட்டுமின்றி, ஏழைக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், தமிழர் பாரம்பரிய மல்லர் கலையில் கலக்கும் 'கை கொடுக்கும் கை' (kai kodukkum kai) மாற்றுத்திறனாளி குழுவினர் ஒவ்வொருவருக்கும் இரண்டு சக்கர வாகனம் அன்பளிப்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கியுள்ளார்.
மேலும், ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக 'கை கொடுக்கும் கை' எனும் ஆதரவு அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த அமைப்பில் வாழும் மாற்றுத்திறனாளி குழுவினர், நடனம் முதலான பலவிதமான திறமைகளில் பல துறைகளில் அசத்தி வருகின்றனர்.
அது போல், தற்போது தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்பம் சாகச கலை நிகழ்விலும் அசத்தி வருகின்றனர். இதுவரையிலும் உடல்வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கும் கலையாக இருந்த இந்த கலையில், தற்போது ராகவா லாரன்ஸ்-இன் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளிகள் குழு அதனை முறையாக கற்றுக்கொண்டு அசத்தி வருகின்றனர்.